திமுகவின் தேர்தல் வாக்குறுதியான மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் நடைமுறையானது ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் நிறைவடைந்தப்பின் அமல்படுத்தப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று முன் தினம் யாரும் எதிர்பாராத வகையில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சில பகுதிகளில் நீர்த்தேங்கிய நிலையில் மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்ட மீட்பு பணியினால் நீர் வற்றியது. சில இடங்களில் மின்சார விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனையொட்டி மின்சார துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பேற்றுள்ள தங்கம் தென்னரசு தலைமையில் மின் வாரிய உயர் அலுவலர்கள், அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் தெரிவித்த விவரங்கள் பின்வருமாறு-
கனமழையால் சேதமடைந்த மின்பாதைகள் எத்தனை?
முதல்வர் திருவாரூக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் கனமழையால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாத வகையில் மின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் பெய்த கனமழையினால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் 3 துணை மின்நிலையங்கள், 49 மின்பாதைகள், 51 மின்மாற்றிகள் சேதமடைந்தன. மின் வாரிய ஊழியர்களின் நடவடிக்கையினால் 2,3 மணி நேரங்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின் விநியோகம் சரி செய்யப்பட்டது. இன்னும் ஒரு சில பகுதிகளில் இன்றுக்குள் முழுவதுமாக மின் விநியோக பிரச்சினைகள் சரி செய்யப்படும் என தெரிவித்தார்.
திமுக தனது தேர்தல் வாக்குறுதியில், மாதம் மாதம் மின் கணக்கீடு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தது. ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டு காலம் நிறைவடைந்துள்ள நிலையில் எப்போது மாதம் மாதம் மின் கணக்கீடு செய்யும் முறை நடைமுறைக்கு வரும் என பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன. அப்பணிகள் முழுமையாக நிறைவடைந்தப்பின் மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார். இப்பணிகள் இந்த ஆட்சிக்காலத்திற்கு உள்ளாகவே நடைப்பெறுமா என எழுப்பிய கேள்விக்கு, “திமுக ஆட்சி தான் தொடர்ந்து நீடிக்கும், அதில் உங்களுக்கு எந்த ஐயமும் வேண்டாம்” என பதிலளித்தார் அமைச்சர்.
முன்னதாக மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்மார்ட் மீட்டர் குறித்து தெரிவிக்கையில், “மின் யூனிட்டினை கணக்கிடும் நபர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று மீட்டர் ரீடிங் எடுக்கிறார்கள். ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டதன் மூலம், நுகர்வோர் தங்கள் நுகர்வுகளை தினசரி மொபைல் போனில் பார்த்து, கட்டணத்தை செலுத்த முடியும்” என்றார்.
மேலும் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தப்பட்டப்பின், மின் யூனிட் கணக்கிடும் மதிப்பீட்டாளர் பதவி நீக்கப்பட்டு, அவர்களுக்கு மின்வாரியத்தில் (TANGEDCO) மாற்று வேலை ஒதுக்கீடுகள் வழங்கப்படும்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
கரண்ட் பில் எடுக்க யாரும் வரமாட்டாங்க- ஸ்மார்ட் மீட்டர் குறித்து அமைச்சர்!
Share your comments