”நான் முதல்வன்” திறன் மேம்பாட்டுத் திட்டம்: தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின், விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு: புதிய உர மாற்றங்கள் விரைவில் வர இருக்கிறது என மத்திய அரசு தகவல், வீடு தேடி வரும் விதை நெல்: விவசாயத்தை மீட்டெடுக்கும் பட்டதாரி, மாபெரும் கபாடி போட்டி: தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின், மகளிருக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஒரு லாபகரமான செயல்பாடு: அமைச்சர் சிவசங்கர் பேச்சு, டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை: அறுவடைக்குத் தயாரான 8 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் முதலான தகவல்களின் தொகுப்பை இப்பதிவு வழங்குகிறது.
இளைய தமிழகம் உலகை வெல்லும் எனும் நோக்கில் ”நான் முதல்வன்” என்ற மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை இன்று சென்னையில் துவக்கி வைத்தார், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழக மாணவர்களின் நலனுக்காக மாணவர்களின் கல்வித்திறன் மற்றும் திறமை ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் வகுப்புகள், குறியீட்டு முறை, ரோபோட்டிக்ஸ், வெளிநாட்டு மொழி வகுப்புகள், பாரம்பரிய தமிழ்நாட்டுக் கலாச்சார வகுப்புகள் மற்றும் பிற அத்தியாவசியமான வகுப்புகள் தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் 10 லட்சம் தமிழக மாணவர்களின் திறன் மேம்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு: புதிய உர மாற்றங்கள் விரைவில் வர இருக்கிறது என மத்திய அரசு தகவல்
”ஒரே நாடு ஒரே உரம்” என்ற திட்டத்தின் அடிப்படையில் அனைத்து அரசு உர நிறுவங்களும் தங்கள் உரங்களை பாரத் என்ற பெயரில் விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு வருகின்றது. பிரதான் மந்திரி பாரதிய ஜனுர்வரக் பரியோஜனா திட்டத்தின் கீழ் உர நிறுவனங்களுக்கு அரசாங்கம் மானியம் வழங்கி வருகின்றது. நிறுவனங்கள் அதன் பலன்களை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. எனவே, உரங்களின் பைகளில் PMBJP யோஜானா என்ற லோகோவை வைக்க அரசு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, ”ஒரே நாடு ஒரே உரம்” என்ற திட்டத்தின் அடிப்படையில் அனைத்து உர நிறுவங்களும் பாரத் என்ற பெயரில் விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. இந்நடைமுறை விரைவில் வர இருக்கிறது.
வீடு தேடி வரும் விதை நெல்: விவசாயத்தை மீட்டெடுக்கும் பட்டதாரி
கல்லல் அருகேயுள்ள வேப்பங்குளம் ஊராட்சியில் புதுவேப்பங்குளம், பழைய வேப்பங்குளம், தேர்வலசை, அச்சினி, கல்குளம் உள்ளிட்ட 7 கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் விவசாயம் அழிந்து வருவதை அறிந்த எம்.சி.ஏ பட்டதாரியான திருச்செல்வம் அதை மீட்டெடுக்க முடிவு செய்தார். இதற்கென கடந்த 2029-ஆம் ஆண்டில் கிராம மக்களிடமே ரூ. 5 லட்சம் வரை நிதி வசூலித்து, கண்மாய்கள், வரத்துக் கால்வாய்கள் போன்றவற்றைச் சீர் செய்து விவசாயம் செய்தார். விளைந்த நெல்லைச் சமூக வலைதளங்கள் மூலம் விற்பனை செய்து வருகிறார். இந்த செயல்பாடுகளால் கடந்த 3 ஆண்டுகளில் தரிசாகக் கிடந்த 400 ஏக்கர் நிலங்கள் சாகுபடி நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மாபெரும் கபாடி போட்டி: தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்
திருச்சி, மணப்பாறையில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அகில இந்திய மாபெரும் கபாடி போட்டியினைக் கழக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான திரு உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், விரைவில் மையானம் அமைத்துத் தர அரசு வழிவகுக்கும் என உறுதியளித்துள்ளார். அதன் பின்பு திருச்சி தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஐம்பெரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியுள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை: அறுவடைக்குத் தயாரான 8 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான 8 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனால் நெல்மணிகள் முளைக்க தொடங்கி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, இன்னும் சில தினங்களுக்கு மழை தொடர இருப்பதால் விவசாயிகள் தகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வேளாண்மைத் துறையால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க
Share your comments