நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை, மூலப்பள்ளிப்பட்டி, நாவல்பட்டி ஆகிய இடங்களில் வேளாண் வளர்ச்சி திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா,இ.ஆ.ப நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களை பயிர் செய்ய ஏற்ற நிலமாக மாற்றிடும் வகையில், கலைஞரின் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சித் திட்டம் அறிமுகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டம் மூலம் கிராமங்களில் தரிசு நிலங்களைக் கண்டறிந்து முள்புதர்களை அகற்றி, உழவு செய்து சாகுபடிக்கேற்ற நிலமாக மாற்ற வேண்டும். அந்த நிலத்தில் வயல் வரப்புகளில் நீண்ட காலம் வளர்த்து பயன்பெறும் வகையில், மா, வேம்பு, தேக்கு, மருதமரம், கருநாவல் மரம் போன்ற மரக்கன்றுகள் தேவையான அளவுக்கு விலையின்றி வழங்கப்படுகிறது. அதேபோல், நெல் விதைகள், நிலக்கடலை, பயறு வகைகள், எண்ணைய் வித்து விதைகள் மற்றும் இடு பொருள்கள் ஆகியவை 50 சதவீதம் மானியத்திலும் வழங்கப்படுகிறது.
மேலும், விவசாய பெருமக்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பையும், குறைந்த முதலீட்டில் அதிக வருமானத்தை பெருக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் மானாவாரி பகுதி மேம்பாடு ஆகிய திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
பயிர் சாகுபடியுடன் கறவை மாடுகள் / எருமை, ஆடுகள் / செம்மறி ஆடுகள், நாட்டுக் கோழிகள், தீவன பயிர்கள், பயன் தரும் மரக்கன்றுகள், பழமரக்கன்றுகள், தேனீ வளர்ப்பு, மற்றும் ஊட்டச்சத்து தோட்டம் ஆகிய இனங்களுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. ஒருங்கிணைந்த பண்ணையத்தின் மூலம் நீடித்த நிலையான வருமானமும், நிலவளமும் பெறுவதுடன் விவசாய குடும்பங்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.
அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை, மூலப்பள்ளிபட்டியில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் ஆண்டி என்பவர் நிலக்கடலை பயிரிடப்பட்டு சாகுபடி செய்துள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா,இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு விவசாயி உடன் கலந்துரையாடினார். அப்போது இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மானியம், வேளாண் அலுவலர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள், இதன் மூலம் கிடைக்கப்பெற்ற பயன்கள் உள்ளிட்ட விவரங்களை விரிவாக கேட்டறிந்ததோடு தொடர்ந்து விவசாயம் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிடம் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, நாவல்பட்டியில் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தின் கீழ் விவசாயி செல்லபாபு என்பவர் பயிர் சாகுபடியுடன் மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு உள்ளிட்ட பண்ணையம் சார்ந்த தொழில்களை மேற்கொண்டு வருவதை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு விவசாய நடைமுறைகளை விரிவாக கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து நாமகிரிப்பேட்டை 25 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன தானிய கிடங்கினையும், ஏல கொட்டகையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து விரிவாக அவர்களிடம் கேட்டறிந்தார்.
pic courtesy: dist collector namakkal
மேலும் காண்க:
Share your comments