கரூர் மாவட்டத்தில் வறட்சியிலும் விவசாயிகளுக்கு கைகொடுத்த நாவல் பழ விளைச்சலால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மா, பலா, வாழை, பப்பாளி, கொய்யா, சப்போட்டா, சீத்தா, இலந்தை உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள் அந்தந்த மாத சீசனில் அறுவடையாகி பலனுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் மருத்துவக்குணம் நிறைந்த சர்க்கரை நோயாளிகள் விரும்பி சாப்பிடும் பழமானது நாவல் பழம் (Novel Fruit).
நாவல் மரங்கள்
கரூர் மாவட்டத்தில் கரூர், கிருஷ்ணராயபுரம், மாயனூர், லாலாபேட்டை உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும், காவிரி கரையோரத்திலும் நாவல் மரங்கள் அதிக அளவில் உள்ளன. கரூர் மாவட்டத்தில் பல பகுதிகள் கடும் வறட்சியான பகுதிகளாக காணப்படுகிறது. இப்பகுதிகளில், விவசாயிகள் நாவல் மரங்களை வைத்து பராமரித்து வருகின்றனர்.
கடும் வறட்சியை தாங்கக் கூடிய இந்த நாவல் மரம், ஆண்டுதோறும் ஒரு முறை மட்டும் ஜூலை மாத கடைசியில் மகசூல் (Yield) தரும். அதன்படி கடந்த மே மாதம் பூப்பூத்து ஜூன் மாதம் பிஞ்சு பிடித்து அடுத்த மாதம் (ஜூலை) பழம் பழுக்கும் நிலை ஏற்படும். இந்த வருடம் அவ்வப்போது பெய்த மழையின் ஈரத்தினால் நாவல் மரங்களில் பூக்கள் பூத்து, பிஞ்சுகள் பிடித்து செழிப்பாக காணப்படுகிறது. எப்போது இந்த நாவல் பழங்கள் அறுவடைக்கு (Harvest) வரும் என்று அதை விரும்பிச் சாப்பிடும் நபர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
மருத்துவ குணம்
கரூர் மாவட்டத்தில் விளையும் நாவல் பழங்கள் சிறியதாக இருந்தாலும், அதிக சுவை கொண்டதாக உள்ளன. இதில் கால்சியம் (Calcium), பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் பி போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்தவையாக உள்ளன. குடல் புண்ணை போக்கவும், பித்தத்தை தணிக்கவும், மலச்சிக்கலை குணப்படுத்தவும், இதயத்தை சீராக இயங்க செய்யவும், ரத்த சோகையை குணப்படுத்தவும், சிறுநீரக வலியை நிவர்த்தி செய்யவும், சிறுநீரக கற்களை (Kidney Stone) கரைக்கவும், மண்ணீரல் மற்றும் கல்லீரலில் உள்ள கோளாறுகளை நீக்கவும் நாவல் பழம் உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் நாவல் பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
மேலும் நாவல் பழத்தின் விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது. இதன் செயல்பாடு காரணமாக உடலுக்குள் ஸ்டார்ச்சை (Starch) சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது. இதனால் நீரிழிவு நோயாளிகள் நாவல் பழத்தின் விதைகளை (Seed) உலர வைத்து, பொடியாக்கி தண்ணீருடன் கலந்து காலையும், மாலையும் குடிக்கின்றனர் என்று இயற்கை ஆர்வலர்கள் கூறினார்கள்.
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் அதிக அளவு நாவல் மரங்கள் (Novel Trees) இருப்பதால் இந்த ஆண்டு நாவல் பழங்கள் உற்பத்தி அதிக அளவு இருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க
வேளாண் மற்றும் இழுவை பணிகளுக்கு ஏற்ற புரட்சிகரமான DYNATRACK என்ற புதிய டிராக்டரை அறிமுகம்!
மாம்பழம் விலை வீழ்ச்சியால், அரசே விலையை நிர்ணயிக்க விவசாயிகள் கோரிக்கை!
Share your comments