கடந்த இரு தினங்களாகவே கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்த நிலையில் இன்றும் இவ்விரு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் அநேக இடங்களில் நேற்று கனமழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தினைப் பொறுத்த வரை நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதியில் 18 செ.மீ மழையும், கோவை சின்னக்கல்லாறு பகுதியில் 15 செ.மீ, வால்பாறை PTO பகுதியில் 10 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
கொட்டித்தீர்த்த கனமழையினை அடுத்து கோவை மாவட்டத்திலுள்ள வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகப்பட்சமாக தொண்டியில் 37.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றும் கனமழைக்கு வாய்ப்பு: IMD எச்சரிக்கை
இந்நிலையில் சென்னை வானிலை மையம் அடுத்த 5 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில் இன்றும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
05.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
06.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
07.07.2023 முதல் 09.07.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை மையத்தின் இயக்குனர் செந்தாமரை கண்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும். அவற்றில் மீனவர்களுக்கான எச்சரிக்கை பதிவும் வெளியிடப்பட்டுள்ளது.
pic source: PTI
மேலும் காண்க:
மாட்டு கோமியம் முதல் மனித சிறுநீர் வரை ஆய்வு- அதிர்ச்சி அளித்த IVRI ரிப்போர்ட்
Share your comments