நெல் கொள்முதல் சீசன், வரும் 1 ஆம் தேதி முதல் துவங்குவதை முன்னிட்டு, தமிழக அரசின் வேளாண், உணவுத் துறை அதிகாரிகள், சென்னையில் இன்று விவசாயிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து, நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது.
நெல் கொள்முதல் (Paddy Procurement)
நெல் கொள்முதல் செய்வதற்காக, மத்திய - மாநில அரசுகள் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குகின்றன. விவசாயிகளிடம் வாங்கும் நெல், அரிசியாக மாற்றப்பட்டு ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் அக்டோபர் 1 இல் துவங்கும் நெல் கொள்முதல் சீசன் செப்டம்பர் 30 இல் முடிகிறது. சேலம் மேட்டூர் அணையில் இருந்து, இந்தாண்டு மே மாதமே பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், செப்டம்பர் 1 முதல் நெல் கொள்முதல் செய்ய, தமிழக அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது.
எனவே, தேவையான இடங்களில், நெல் கொள்முதலுக்கான நிலையங்களை அதிகம் திறப்பது உள்ளிட்ட, அனைத்து ஏற்பாடுகளையும் முழுவீச்சில் மேற்கொள்ளுமாறு வாணிப கழகத்திற்கு, அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள வேளாண் துறை அலுவலகத்தில், விவசாயிகளுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் வேளாண், உணவு, கூட்டுறவு ஆகிய துறைகளின் அதிகாரிகளும், விவசாயிகளும் பங்கேற்கின்றனர்.
இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விவசாயிகளிடம் இருந்து விரைந்து நெல் கொள்முதல் செய்தல், குறைந்தபட்ச ஆதரவு விலை உடனுக்குடன் கிடைக்கச் செய்தல், இடைத்தரகர்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிப்பது உள்ளிட்டவை குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்' என்றார்.
மேலும் படிக்க
விவசாயிகளின் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆராய 4 துணை குழுக்கள் அமைப்பு!
ஆங்கிலம் தெரியாத விவசாயியை கிண்டலடித்த வங்கி அதிகாரிகளுக்கு கண்டனம்!
Share your comments