பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் 2023-2024 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிக்களுக்கான ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்த்தியும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு நிதியுதவித்தொகை ரூ.2000 ஆக உயர்த்தியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கிய சில நிமிடங்களில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். நிதியமைச்சரின் பட்ஜெட் உரையினை தவிர்த்து மற்றவை அவை குறிப்பில் இடம்பெறாது என தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்தார். மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மூன்றாவது முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழக நிதித்துறையின் அமைச்சராக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பொறுப்பேற்ற நிலையில் 3-வது ஆண்டாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார்.
தனது உரையில் சமூகநீதி, அனைவருக்குமான வளர்ச்சி உள்ளிட்ட 4 முக்கிய அம்சங்கள் அடிப்படையில் திராவிட மாடல் நடைபெறுகிறது. திமுக ஆட்சி பதவியேற்றபோது வருவாய் பற்றாக்குறை ரூ.62,000 கோடியாக இருந்த நிலையில் நடப்பாண்டில் வருவாய் பற்றாக்குறையானது ரூ.30,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது என தமிழக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டு வரும் தகவல்களின் விவரம் பின்வருமாறு-
மாற்றுத்திறனாளிக்களுக்கான ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்க ரூ.305 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்ய ரூ.500 கோடி ஒதுக்கீடு. இதன் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். புதுமை பெண் திட்டத்தால் உயர்கல்வி பயிலும் மாணவிகள் எண்ணிக்கை 29% அதிகரித்துள்ளது.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 30,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோபி பகுதியில் தந்தை பெரியார் பெயரில் புதிய வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். கடல் அரிப்பை தடுக்க நெய்தல் மீட்சி இயக்கம் உருவாக்கப்படும். நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் போது உயிர்தியாகம் செய்த தமிழ்நாட்டை சேர்ந்த படைவீரர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகை 20 லட்சம் ரூபாயிலிருந்து 40 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்திற்காக 2000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 5,145 கிலோ மீட்டர் தூரத்திற்கான சாலை பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்தது முதலே வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த முறையினை போன்றே இந்த முறையும், வேளாண் பட்ஜெட்டினை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்ச்செல்வம் நாளை (21 ஆம் தேதி) தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க-
சென்னையில் விளையாட்டு நகரம், தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம்.. பட்ஜெட் விவரங்கள் உள்ளே
விமர்சனங்களை பெற்ற அங்கக வேளாண்மை கொள்கை- விளக்கம் அளித்த வேளாண் அமைச்சர்
Share your comments