ஒடிசாவின் பாலாசோர்(Balasore) மாவட்டத்தில் உள்ள பஹானாகாவில் மூன்று ரயில்கள் மோதி தடம் புரண்டு விபத்து நடந்த இடத்தில் நடைப்பெற்று வரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி நேரில் வருகை தந்தார்.
பிரதமருடன் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரும் உடன் இருந்தனர். மேலும் ஒடிசா மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் பிரமிளா மல்லிக் மற்றும் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுடனும் மீட்பு பணிகள் மற்றும் இதர நடவடிக்கைகள் குறித்து உரையாடினார்.
ரயில் சேவையை இயல்பு நிலைக்கு கொண்டு வர, விபத்து நடந்த இடத்தில் நடைப்பெற்று வரும் சீரமைப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்தும் மோடி கேட்டறிந்தார். அதன் தொடர்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடி பாலசோர் (Balasore) மருத்துவமனையில் இரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
வேதனையினை விவரிக்க வார்த்தையில்லை:பிரதமர் இரங்கல்
இதன்பின் பேட்டியளித்த பிரதமர் தெரிவிக்கையில், ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது; விபத்தால் காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க ஒன்றிய அரசு உதவும். ரயில் விபத்துக்கான காரணத்தை கண்டறிய விரிவான விசாரணை நடத்தப்படும். உண்மை கண்டறியப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். மேலும் விபத்து நடந்த பாதையில், ரயில் போக்குவரத்தை சீர் செய்ய ரயில்வே துறையினர் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
தற்போது வரை விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 288-ஐ நெருங்கியுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதம மந்திரி அவர்களின் நிவாரண நிதியிலிருந்து 2 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
”ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்த Balasore விபத்து பகுதிக்கு க்ரேன் வந்துள்ளது. இடிபாடுகளில் யாரும் சிக்கியிருக்க மாட்டார்கள் என நம்புகிறோம். நாங்கள் மனமுடைந்து போய் உள்ளோம். எங்கள் வாழ்நாளில் இவ்வளவு பேர் விபத்தில் உயிரிழந்ததை நாங்கள் பார்த்ததில்லை” என நேற்றிரவு முதல் மீட்புப்பணியில் தீவிரமாக செயல்பட்டு வரும் ஒடிசா தீயணைப்புத்துறை தலைமை அதிகாரி சுதன்ஷூ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதே போன்று இரயில்வே துறையின் சார்பில் 10 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் உயிரிழந்த தமிழர்களுக்கு 5 இலட்சமும், காயமடைந்தவர்களுக்கு 1 இலட்சம் ரூபாய் வழங்குவதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மீட்பு பணிகள் முழுமையாக முடிவடைந்து, உயிரிழந்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு எல்லாம் முறையாக வந்ததற்கு பிறகு நிவாரணம் முறையாக வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
pic courtesy: pM modi
மேலும் காண்க:
ஒடிசா இரயில் விபத்து- தமிழகம் முழுவதும் இன்று துக்கம் அனுசரிப்பு
Share your comments