புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவை சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் வரலாற்று சிறப்புமிக்க செங்கோலை ( sengol) பிரதமர் நரேந்திர மோடி இன்று வைத்தார். பண்டைய தென்னிந்திய சாம்ராஜ்யங்களில் அதிகாரத்தின் சின்னமாக செங்கோல் கருதப்பட்டது. ‘செங்கோலின் முக்கிய சிறப்பம்சங்களை இங்கு காணுவோம்.
செங்கோல்- பொருள் என்ன?
செம்மை என்ற தமிழ்ச் சொல்லுக்கு 'நீதி' என்கிற பொருள் உண்டு. அவற்றிலிருந்து உருவானதே 'செங்கோல்' (sengol ) எனப்படும் வரலாற்றுச் சொல். செங்கோல் சமீப நாட்களாக அனைவரின் கவனத்தை பெற்றது. அதற்கு காரணம் புதிய நாடாளுமன்றத்தில் அவை நிறுவப்படும் எனவும், பாஜக தரப்பில் கூறப்பட்ட சில தகவல்களும் தான்.
வரலாற்றில் உள்ள தரவுகளின் படி, தமிழ்நாட்டின் ஆதீனம் ஆகஸ்ட் 1947 இல் ஜவஹர்லால் நேருவுக்கு 'செங்கோல்' வழங்கினார், இது ஆங்கிலேயர்களிடமிருந்து இந்திய மக்களுக்கு அதிகாரத்தை மாற்றியதைக் குறிக்கும் வகையில் வழங்கப்பட்டதாக உள்ளது.
அலகாபாத் அருங்காட்சியகத்தின் நேரு கேலரியில் முன்பு வைக்கப்பட்டிருந்த 'செங்கோல்' இப்போது புதிதாகக் கட்டப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடத்தில் நிறுவுவதற்காக டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதே செங்கோலை ஆதீனம் மடாதிபதிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கினார்.
சங்க இலக்கியங்களில் செங்கோல்:
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையுடன் முன்பு பணியாற்றிய பேராசிரியர் எஸ்.ராஜவேலு, 'செங்கோலின்' வரலாற்றுப் பின்னணி மற்றும் நோக்கத்தை எடுத்துரைத்து அதன் முக்கியத்துவத்தை வெளிச்சம் போட்டு எடுத்துரைக்கிறார். அவரைப் பொறுத்தவரை, தமிழ் மன்னர்கள் இந்த செங்கோல்களை நீதி மற்றும் நல்லாட்சியின் சின்னங்களாகப் பயன்படுத்தினர். 'செங்கோல்' பாரம்பரியம் தமிழகத்தில் சோழ வம்சத்தின் காலத்தில் பின்பற்றப்பட்டது. இது ஒரு மன்னரிடமிருந்து அடுத்த மன்னருக்கு முறையான அதிகார மாற்றத்தைக் குறிக்கிறது.
பேராசிரியர் எஸ்.ராஜவேலுவின் கூற்றுப்படி, தமிழ் இலக்கியப் படைப்பான 'திருக்குறளில்'- 'செங்கோலின் சிறப்பினை கூறும் வகையில் "செங்கோன்மை" என்கிற தலையில் ஒரு முழு அதிகாரமே உள்ளது. இது தமிழர் பண்பாட்டில் செங்கோலுக்கு உள்ள முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. கூடுதலாக, தமிழ் காவியமான 'சிலப்பதிகாரத்திலும்' செங்கோலின் (sengol) சிறப்பு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேரூன்ற பாஜகவின் திட்டமா?
சமீபத்திய ஆண்டுகளில், பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தமிழ்நாடு கிளை, ஆதினங்கள் விடுத்த கோரிக்கைகளை தீவிரமாக ஆதரித்து, பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழ் மண்ணில் பாஜக வேரூன்றும் நடவடிக்கையாக பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு காசி-தமிழ் சங்கமம் மற்றும் சௌராஷ்டிரா-தமிழ் சங்கமம் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தது. மேலும், புகழ்பெற்ற தமிழ் இலக்கியப் படைப்பான திருக்குறள் மற்றும் காசி-தமிழ் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட வெளியீடுகளை பிரதமர் வெளியிட்டார். பிரதமர் மோடி தனது உரைகளின் போது, தமிழ்நாடு மற்றும் அதன் துடிப்பான கலாச்சார பாரம்பரியத்தை அடிக்கடி அங்கீகரித்து, அதன் முக்கியத்துவத்தையும் பேசி வருகிறார்.
செங்கோல் மவுண்ட் பேட்டன் பிரபுவிடமிருந்து, நேருவிற்கு வழங்கப்பட்டதாக பாஜகவினர் கூறி வரும் நிலையில் அதற்கான வரலாற்று சான்றுகள் ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவில் தான் இந்த செங்கோல் இன்று புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை, மன்னர்களை தீர்மானிப்பது செங்கோல்கள் அல்ல..மக்கள் தான் !
pic courtesy: PM modi web
மேலும் காண்க:
கூலித்தொழிலாளியின் வங்கி கணக்கில் ஒரே இரவில் 100 கோடி- நடந்தது என்ன?
Share your comments