பிரதமர் மோடியின் சென்னை வருகையை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டார்.
பிரதமர் மோடி இன்று (8.4.2023) அன்று சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடம் திறப்பு விழா, எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் 'வந்தே பாரத்' இரயில் சேவை தொடக்க விழா, மெரினா கடற்கரை சாலை, விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழா மற்றும் பல்லாவரம், அல்ஸ்தோம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ள பல்வேறு அரசு திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.
இதனை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்டு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டார். அந்த வகையில் சென்னை விமான நிலையம், பல்லாவரம், அல்ஸ்தோம் கிரிக்கெட் மைதானம், எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் மற்றும் விவேகானந்தர் இல்லம் ஆகிய இடங்களில் நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாட்டு பணிகளை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பொதுத் துறை அரசு செயலாளர் முனைவர் டி.ஜகநாதன், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு, இ.கா.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதனிடையே பிரதமர் மோடியும் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் சென்னை வருகை குறித்து தமிழில் டிவிட் செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு- சென்னையிலுள்ள சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடம் திறந்து வைக்கப்பட உள்ளது. தொடர்ந்து, சென்னை - கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை துவக்கி வைத்து, பிறகு ஶ்ரீராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு நிறுவன விழாவிலும் கலந்து கொள்ள உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்திற்குள் முதல் வந்தே பாரத் ரயில்:
சென்னை-கோவை இடையே முதற்கட்டமாக 8 ஏசி பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில் ரெயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, பெங்களூரு, மைசூரு வழித்தடத்தை தொடர்ந்து சென்னை-கோவை வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. (தமிழகத்திற்குள்ளாக மட்டும் இயக்கப்படும் முதல் மெட்ரோ ரயில்)
பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கும் இந்த வந்தேபாரத் ரெயில் சென்னையில் இருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய 3 நிறுத்தத்தில் நின்று கோவைக்கு இரவு 8.15 மணிக்கு வந்தடைகிறது. இந்த வந்தே பாரத் ரயில் பயணக்கட்டண விவரங்கள் பின்வருமாறு- சேர் கார்(CC) கட்டணம் 1,365 ரூபாயாகவும், எக்சிக்யூடிவ் இருக்கை கட்டணம் (EC) 2,485 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக அதிகாலை 6 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் ரெயில், நண்பகல் 11.50 மணிக்கு சென்னையை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை டூ கோவை இடையேயான பயண தூரத்தை 5 மணி 50 நிமிடங்களில் இந்த மெட்ரோ ரயில் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரியாக இந்த ரெயில் 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. ரெயில் புதன் கிழமை தவிர்த்து வாரத்தில் மற்ற ஆறு நாட்களும் இயக்கப்படுகிறது.
பயண நேரம் குறைவாக இருந்தாலும், வந்தே பாரத் ரயிலின் பயணக்கட்டணமானது மற்ற ரயில்களுடன் ஒப்பிடுகையில் பன்மடங்கு அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர். இதனால் நடுத்தர மக்களிடம் இந்த ரயில் போதிய வரவேற்பினை பெறுமா என்பதே பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும் காண்க:
ரேஷன் கார்டில் பெயர் திருத்தணுமா? காஞ்சி மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் எங்கே ?
Share your comments