பிரதமரின் ஒரு துளியில் அதிக மகசூல் என்னும் குறு பாசனத் திட்டம் மூலம் தமிழகத்துக்கு நடப்பாண்டு ரூ. 400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே காவிரி டெல்டா விவசாயிகள் அதிகளவில் பயன் பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக விவசாயிகள் பாசனத்துக்கு மழையையும், காவிரி நீரையும் அதிகம் நம்பியுள்ளனர். கர்நாடகமே பெரும்பாலான காலங்களில், காவிரி நீரைத் தர மறுத்துவிடுகிறது. இதனால், விவசாயம் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
குறு பாசனத் திட்டம்
தண்ணீரைச் சிக்கனமாகப் பயன் படுத்தும் நோக்குடன் கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதமரின் கிருஷி சிஞ்சாயி யோஜனா திட்டத்தின் (Prime Minister Krishi Sinchayee Yojana PMKSY ) கீழ் தமிழகத்துக்கு இந்த நிதியாண்டில் (2020-22) ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வயலுக்கும் தண்ணீர், நீர்நிலை மேம்பாடு, ஒரு துளியில் அதிக மகசூல் உள்ளிட்ட நான்கு அம்சங்களைக் கொண்டதாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் உறுதியான பாசனத்துக்கான நீர் ஆதாரங்களை உருவாக்குவதுடன், மழை நீரைக் குறைந்தளவில் பயன்படுத்தி பாதுகாப்பான பாசனத்தை உருவாக்கவும் செய்கிறது.
தமிழகத்தில் உலக வங்கி நிதியுதவியுடன், பாசன வேளாண் நவீனமயமாக்கல் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படுகிறது. இதில் 66 உப படுகைகளில் 4778 குளங்கள் சீரமைக்கப்பட்டு உள்ளன.
5,43,000 ஹெக்டேர் பாசன வசதி (Irrigation)
இது மாநிலத்தின் 5 லட்சம் விவசாயிகளுக்குப் பலன ளிக்கக் கூடியதாகும். இதனால் சுமார் 5,43,000 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ரூ.2962 கோடியிலான இத்திட்டம் 7 ஆண்டுகளில் நிறைவடையும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.
திருச்சிக்கு காவிரி ஆறு கை கொடுக்கிறது. இந்தாண்டு மேட்டுர் அணையில் இருந்து விவசாயத்துக்காக தண்ணீரை தேவையான அளவில் பெறும் நல்ல வாய்ப்பும் உள்ளது. எனினும் இந்த மாவட்டத்தில் 60 சத விவசாய நிலம் வறண்டதாகவே உள்ளது. கடந்தாண்டு பிரதமரின் கிருஷி சிஞ்சாயி திட்டத் திட்டத்தின் கீழ் 124 ஆழ்துளைக் கிணறுகள், 350 டீசல் பம்புகள், 240 பைப்புகள் மற்றும் 146 நீர் சேமிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
மாநிலம் முழுவதும், சொட்டு நீர்ப் பாசனத்துக்கு தண்ணீர் மேலாண்மை நடவடிக்கைகளின் கீழ், 2664 நடுத்தர ஆழம் வரையான குழாய்க் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் தோண்ட ரூ.6.66 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 23,734 டீசல் பம்ப்செட்டுகள் மற்றும் மின்மோட்டார்கள் விநியோகத்துக்காக ரூ.35,601 கோடியும், 24,648 குழாய்த் தொடர்கள் அமைக்க ரூ.24.64 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் 2211 நீர்சேமிப்பு அமைப்புகள் உருவாக்க ரூ.8.8 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே இத்திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானியங்கள் சலுகைகளை பெற்று விவசாயிகள் பயன் பெற வேண்டும் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க...
மழைக்காலங்களில் வயல்வெளியில் படைபெயடுக்கும் பாம்புகள்- எச்சரிக்கை அவசியம்!
6 பூச்சிக் கொல்லிகளுக்கு இடைக்காலத் தடை - தமிழக அரசு திடீர் உத்தரவு!
நெல் சாகுபடியில் இலைச்சுருட்டு புழுத் தாக்குதல் - கட்டுப்படுத்த எளிய வழிகள்!
Share your comments