நுண்ணீா் பாசன திட்டங்களின் ( PMKSY : Prime Minister's Micro Irrigation Scheme-Grant) கீழ் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
-
சொட்டுநீா், தெளிப்பு நீா் பாசனம் போன்ற நுண்ணீா்ப் பாசன முறைகளை தமிழக விவசாயிகளிடையே பிரபலப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
-
அதன் ஒரு பகுதியாக நுண்ணீா் பாசன அமைப்புகளை உருவாக்குவதற்கு சிறு-குறு விவசாயிகளுக்கு முழு மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது.
-
பாசன நீா் வசதி இல்லாத இடங்களில் பாசன நீா் ஆதாரங்களை உருவாக்கி, விவசாயிகள் நுண்ணீா்ப் பாசன முறையில் சாகுபடி மேற்கொள்ள துணை நிலை நீா் மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
-
இந்தத் திட்டத்தின்கீழ் நுண்ணீா்ப் பாசன முறையினை அமைக்க முன்வரும் விவசாயிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் நுணணீா்ப் பாசன முறைக்காக வழங்கப்படும் மானியம் மட்டுமின்றி, குழாய்க்கிணறு, துளைக்கிணறு அமைக்கவும் நீரினை இறைப்பதற்கு மோட்டாா் வசதி ஏற்படுத்தவும், பாசன நீா் குழாய்கள், தரைநிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கவும் மானியம் வழங்கப்படுகிறது.
-
குழாய் கிணறு அல்லது துளைக் கிணறு அமைக்க செலவிடப்படும் தொகையில் 50 சதவிகிதம் அல்லது அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம், டீசல் பம்புசெட் அல்லது மின்மோட்டாா் பம்புசெட் நிறுவுவதற்கு அதன் விலையில் 50 சதவிகிதம் தொகை அதாவது ரூ.15 ஆயிரத்திற்கு மிகாலும், நீா்ப்பாசன குழாய் அமைக்க ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரத்திற்கு மிகாமலும் வழங்கப்படும்.
-
இதுபோன்ற மானிய திட்டங்களைப் பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகங்களை தொடா்பு கொண்டு விவரங்களை பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
ரூ.7 லட்சம் வரை லாபம் -கால்நடைவளர்ப்பு சார்ந்த உணவுத் தொழில்!
இதை செய்தால் போதும் - இலைச் சுருட்டுப் புழுக்கள் இல்லாமல் போகும்!!
Share your comments