
'பிரகிருதிக் க்ரிஷி பிரஷிக்ஷன் ஷிவிர்' (Prakritik Krishi Prashikshan Shivir - இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம்) என்பது வேளாண் துறை நிபுணர்களின் கலந்துரையாடல்கள், விவசாயிகளின் அனுபவங்கள் பகிர்வு மற்றும் மரம் வளர்ப்பு இயக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. நிகழ்வின் நோக்கம் விளைப்பொருள் உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இருந்தது.
ஹரியானாவின் சோனிபட், ஜிஞ்சௌலியில் அமைந்துள்ள சூர்யா சாதனா ஸ்தாலியில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, (சோனிபட்) மற்றும் சூர்யா அறக்கட்டளை ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி, இயற்கை விவசாய நுட்பங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றின் நன்மைகளை முன்னிலைப்படுத்தவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாய முறைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டிருந்தது. நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட முற்போக்கு விவசாயிகள் கலந்து கொண்டனர்.
முதன்மை மற்றும் கௌரவ விருந்தினர் விவரம்:
கிரிஷிஜாக்ரன் ஊடக நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை ஆசிரியருமான எம்.சி.டோமினிக் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். ஹேமந்த் சர்மா (துணைத் தலைவர், சூர்யா அறக்கட்டளை), டாக்டர் பவன் சர்மா (துணை இயக்குநர், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை, சோனிபட்), பி.கே.பிரமோத் (இயற்கை வேளாண் நிபுணர் & பிரஜாபிதா பிரம்மகுமாரி ஈஸ்வரிய விஷ்வவித்யாலயா, சோனிபட்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

முகாமில், இயற்கை விவசாயத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. ஆர்யா நரேஷ், ஈஸ்வர் சிங், பவன் ஆர்யா, ராஜேந்திர சிங், மகேந்திர சிங் மற்றும் அபிஷேக் தாமா உட்பட எட்டு முதல் பத்து விவசாயிகள், தங்கள் தனிப்பட்ட அனுபவங்களை மேடையில் பகிர்ந்து கொண்டனர். இது மற்ற சக விவசாயிகளுக்கு உத்வேகம் அளிக்கக்கூடியதாக அமைந்தது. அங்கக வேளாண் முறைகள் மூலம் குறைந்த செலவில் அதிக மகசூல் பெற முடியும் என்பதை அவர்களின் அனுபவ கதைகளின் வாயிலாக எடுத்துரைத்தனர்.
'மில்லினியர் விவசாயி’ என்கிற தொலைநோக்கு திட்டம்
நிகழ்ச்சியில், முதன்மை விருந்தினராக பங்கேற்ற எம்.சி.டொமினிக், விவசாயிகளை ஊக்கப்படுத்தி பேசுகையில், "விவசாயிகளுக்கு நுண்ணறிவினை வழங்கி, அவர்கள் 'கோடீஸ்வர விவசாயிகளாக' உருவாகி, தேசிய மற்றும் சர்வதேச அளவில் தங்கள் பகுதிக்கு புகழைக் கொண்டு வர வேண்டும். விவசாயிகளின் குழந்தைகள் மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் உருவாக வேண்டும். அவர்கள் தங்களது தந்தை விவசாயம் மேற்கொள்வதை பெருமையாக எண்ண வேண்டும். விவசாயத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்வதில் கிரிஷிஜாக்ரன் முனைப்பாக செயல்பட்டு வருகிறது” என்றார்.

அனைவரையும் வரவேற்று, முந்தைய பேச்சாளர்களை பாராட்டி, சூர்யா அறக்கட்டளையின் துணைத் தலைவர் ஹேமந்த் ஷர்மா விவசாயிகளிடம் பேசுகையில், "உங்கள் லட்சியம் கோடீஸ்வர விவசாயிகளாக இருக்க வேண்டும். நீங்களும் இந்தியாவின் மதிப்புமிக்க மில்லியனர் விவசாயி (MFOI) விருதைப் பெறலாம். விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக எங்கள் குழு இயங்கி வருகிறது. விவசாயிகளின் பண்ணைகளுக்கு நேரடியாக சென்று அவர்களின் பணிகளை முழுவதுமாக லாபகரமான முறையில் எடுத்துச் செல்வதற்கு நாங்கள் உதவ உறுதிபூண்டுள்ளோம். இந்த நிகழ்விற்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் நன்றி” என குறிப்பிட்டார்.
சோனிபட் வேளாண் துணை இயக்குநர் டாக்டர் பவன் ஷர்மா, மேடையில் இருந்த அனைத்து விருந்தினர்களுக்கும், ஆடிட்டோரியத்தில் இருந்த விவசாயிகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து "எங்கள் முதல் அமர்வு ”safal” முயற்சியில் கவனம் செலுத்தியது. விவசாயிகளை ஊக்குவிப்பதே முக்கிய குறிக்கோள். அரை ஏக்கர், ஒரு ஏக்கர் அல்லது இரண்டு ஏக்கர் நிலங்களில் இயற்கை விவசாய முறைகளைப் பின்பற்றுவது முதலீட்டுச் செலவுகளைக் குறைக்கவும், விவசாயிகள் தாங்கள் ஆரோக்கியமாக இருப்பதையும், அவர்கள் பணத்தை சேமிக்கவும் வழிவகுக்க வேண்டும் என்பதே எங்களின் முதன்மையான நோக்கமாகமாகும்” என்றார்.

தொடர்ந்து பேசுகையில் “இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, 65 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து, சுயஉதவி குழுவை நிறுவிய முற்போக்கு விவசாயி அபிஷேக் தாமாவை நாங்கள் இணைத்துள்ளோம் . இந்தக் குழுவில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்க சந்தைக்குச் செல்ல வேண்டியதில்லை; மாறாக, பெரிய நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை நேரடியாக வாங்குகின்றன. எங்களின் முக்கிய நோக்கம் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதும், விவசாயிகளின் விளைபொருட்கள் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதும் ஆகும். கூடுதலாக, ஹரியானா அரசு விவசாயிகள் தங்கள் விவசாய விவரங்களை 'Meri Fasal Mera Byora' போர்ட்டலில் பதிவு செய்ய ஊக்குவிக்கிறது. இந்த முயற்சி விவசாயிகளின் தரவுத்தளத்தை உருவாக்க அரசாங்கத்திற்கு உதவுகிறது, மேலும் பல்வேறு திட்டங்களை விவசாயிகளுக்கு தடையின்றி வழங்க உதவுகிறது."

மாவட்ட தோட்டக்கலை அலுவலர் டாக்டர் பிரமோத் குமார் பேசுகையில், , “நீங்கள்தான் (விவசாயிகள்) உண்மையான உணவு வழங்குபவர்கள். நீங்கள் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை. ஒருவர் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், அனைவருக்கும் சாப்பிட இரண்டு ரொட்டியாவது தேவை. அதை விவசாயிகளால் மட்டுமே உருவாக்க முடியும். நாம் இரண்டு ரொட்டிகளை சாப்பிட வேண்டும் என்றால், அவை மிக உயர்ந்த தரம் வாய்ந்தவை (ஆரோக்கியமானது) என்பதை ஏன் உறுதி செய்யக்கூடாது? இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நமது இயற்கை விவசாய இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.”

" பசுமைப் புரட்சி நம் நாட்டில் அதிக உணவு தேவைப்படும்போது தொடங்கியது, ஆனால் இன்று, உயர்தர விளைப்பொருட்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் இயற்கை விவசாயத்தின் மூலம் தரமான விளைப்பொருட்களை விளைவிக்கும் போது, ஒரு குழுவை உருவாக்கி, உங்கள் தயாரிப்புகளை பிராண்டிங் செய்து அவற்றை விற்கவும். இது நல்ல விலையை நீங்கள் பெறுவதை உறுதி செய்ய உதவும். உங்கள் பிராண்டிங் வளரும் போது, நீங்கள் இன்னும் சிறந்த விலைகளை நிர்ணயிக்க முடியும். தோட்டக்கலைப் பயிர்களில் உங்கள் கவனத்தை திருப்பினால் நான் உங்களுக்கு உதவ தாயாராக உள்ளேன். தோட்டம் அமைக்க ஏக்கருக்கு 50,000 ரூபாய் அரசு மானியம் வழங்குகிறது. மேலும் உங்களின் விவசாய விவரங்களை 'மேரி ஃபசல் மேரா பயோரா' இணையதளத்தில் பதிவு செய்ய மறக்காதீர்கள்,” என்று அவர் குறிப்பிட்டார்.

பிரமோத் திதி , (பிரம்மாகுமாரி ஆசிரமம், சோனிபட்) பேசுகையில், "நாங்கள் அனைவரும் பூமியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக இங்கு கூடியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, அதை நாங்கள் எங்கள் தாய் என்றும் அழைக்கிறோம். எங்களிடம் அதிக நிலம் இல்லாவிட்டாலும் நாங்கள் அதில் ரசாயன உரங்களைப் பயன்படுத்தியதில்லை. மேலும் இங்குள்ள அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

திட்டத்தின் முக்கிய செயல்பாடுகள்
காலை 11:00 மணிக்கு விருந்தினர்களை வரவேற்கும் நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. காலை 11:15 மணி முதல் மதியம் 1:00 மணி வரை வளாக சுற்றுப்பயணம் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.இதில் எம்.சி.டொமினிக் அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் மரக்கன்றுகளை நட்டார். மதியம், 1:30 மணிக்கு, இயற்கை விவசாயம் குறித்து , வல்லுனர்களுடன் விவசாயிகள் பங்கேற்று, ஆழமான கலந்துரையாடல் நடந்தது. மதியம் 2:45 மணிக்கு, ஆசிரியர்களின் ஆளுமை மேம்பாட்டு முகாம் (TPDC) அவர்களின் திறன்களை மேலும் மேம்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திட்டத்தின் தாக்கம்
இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதற்கும், செலவு குறைந்த உற்பத்தி முறைகளைப் பின்பற்றுவதற்கும் வல்லுநர்கள் பகிர்ந்துகொண்ட நுண்ணறிவு விவசாயிகளுக்கு புதிய அனுபவங்களை வழங்கியது. எம்.சி. டொமினிக், ஹேமந்த் சர்மா, பவன் ஷர்மா மற்றும் பி.கே. பிரமோத் ஆகியோரின் உரையாடல்கள் விவசாயிகளின் நம்பிக்கையை கணிசமாக உயர்த்தியது. இயற்கை விவசாயம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், அவர்களின் வருமானத் திறனையும் மேம்படுத்துகிறது என்பதை உணர வைத்துள்ளதாக விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சூர்யா அறக்கட்டளை: சிறந்த எதிர்காலத்திற்காக சமூகங்களை மேம்படுத்துதல்
சூர்யா அறக்கட்டளை இந்தியாவின் முன்னணி இலாப நோக்கற்ற அமைப்பாகும். இது 1992-ல் பத்மஸ்ரீ ஜெய்பிரகாஷ் அகர்வால் அவர்களால் நிறுவப்பட்டது. சமூகத்தின் நலிவடைந்த, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த அமைப்பு கல்வி, சுகாதாரம், தற்சார்பு ஆகியவற்றை முன்னெடுப்பதன் மூலம் சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவர பாடுபடுகிறது.

சூர்யா அறக்கட்டளையின் முக்கிய நோக்கங்களில் கல்விக்கான உரிமையை மேம்படுத்துதல், சுகாதார சேவைகளை விரிவுபடுத்துதல், இளைஞர்களின் தலைமைத்துவத்தை வளர்ப்பது, கிராமப்புற மற்றும் நகர்ப்புற சமூகங்களை மேம்படுத்துதல், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களைப் பாதுகாத்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவை அடங்கும். கல்வி, சுகாதாரம், கிராமப்புற மேம்பாடு, கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை போன்ற முக்கிய பகுதிகளில் குறிப்பிடத்தக்க திட்டங்களை இந்த அறக்கட்டளை செயல்படுத்துகிறது.
சூர்யா அறக்கட்டளையின் முயற்சியின் விளைவாக, சமூகத்தில் எண்ணற்ற நேர்மறையான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. கல்வி முயற்சிகளின் விரிவாக்கம் பின்தங்கிய குழந்தைகளுக்கு சிறந்த வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில் சுகாதார சேவைகளின் வளர்ச்சி தொலைதூர பகுதிகளில் மருத்துவ வசதிக்கான அணுகலை மேம்படுத்தியுள்ளது. கூடுதலாக, இந்த அறக்கட்டளை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் தன்னம்பிக்கை வாய்ப்புகளை வழங்குகிறது. கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான முயற்சிகள் சமூகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு மேலும் பங்களிக்கின்றன.
இயற்கை விவசாய பயிற்சி முகாம் போன்ற நிகழ்ச்சிகள், சூர்யா அறக்கட்டளையின் முன்முயற்சிகளுடன் இணைந்து, சமூக வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்த நிகழ்வுகள் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் விளிம்புநிலை சமூகங்களை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்து, நிலையான வளர்ச்சி மற்றும் மேம்பட்ட வாழ்வாதாரங்களை நோக்கிய பாதையை மேம்படுத்தும் என்பதில் துளியும் சந்தேகமில்லை எனலாம்.
For more info: surya foundation website
Read more:
நெல் விவசாயிகளுக்கான சி.நாராயணசாமி நாயுடு விருது: யாரெல்லாம் விண்ணப்பிக்கத் தகுதி?
கலைஞர் கைவினை திட்டம்: மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி- விண்ணப்பங்கள் வரவேற்பு!
Share your comments