இஞ்சி விலை உயர் காரணமாக, சில டீ கடைகளில் இருந்து டீ இல்லை என்று சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் காய்கறி விலை உயர்ந்திருப்பதை காண முடிகிறது.
தமிழகத்தில் நீலகிரி உட்பட ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பீன்ஸ், அவரைக்காய், கேரட், பச்சை மிளகாய் ஆகிய காய்கறிகளின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. மேலும், ஆடிமாதம் என்பதால் எலுமிச்சை பழம் விலையும், வரத்து குறைவால் இஞ்சியின் விலையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.30க்கும், கேரட் ரூ.35க்கும், அவரை ரூ.25க்கும், பச்சைமிளகாய் ரூ.25க்கும், எலுமிச்சை பழம் ரூ.40க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று ஒரு கிலோ பீன்ஸ் ரூ.120க்கும், கேரட் ரூ.80க்கும், அவரை ரூ.70க்கும், பச்சை மிளகாய் ரூ.25லிருந்து ரூ.45க்கும், எலுமிச்சை பழம் ரூ.90க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வரத்து குறைவால் ஒரு கிலோ இஞ்சி ரூ.35 லிருந்து ரூ.70க்கும் சில்லறை விற்பனையில் ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் பெரும்பாலான தேனீர் கடைகளில் இஞ்சி டீ இல்லை என்று கூறும் அளவுக்கு நிலைமை காணப்பட்டது.
இதுகுறித்து, கோயம்பேடு காய்கறி சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ்.முத்துக்குமார் கூறும்போது, “நீலகிரி மாவட்டத்தில் அதிக மழை பெய்து வருவதால், பீன்ஸ், கேரட், அவரைக்காய், பச்சைமிளகாய், இஞ்சி ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. மேலும், ஆடி மாதம் என்பதால், பல இடங்களில் கோயில் திருவிழா நடந்து வருவதால் எலுமிச்சை பழம் விலை உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ எலுமிச்சை பழம் 40ரூபாயிலிருந்து 90க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆடி மாதம் முடிந்த பிறகு எலுமிச்சை பழம் விலை படிபடியாக குறையும். வரத்து குறைவால், ஒரு மூட்டை இஞ்சி ரூ.2000 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், கூடுதலாக ஆயிரம் ரூபாய் அதிகரித்து ரூ.3000க்கு விற்பனை செய்யப்படுகிறது.” என கூறினார்.
மேலும் படிக்க:
மீண்டும் உயர்ந்தது முட்டை விலை: மேலும் உயர வாய்ப்பு!
உப்பள தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கும் திட்டம்
Share your comments