ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், பெங்களூருவில் நடந்த டிஜிட்டல் இந்தியா உரையாடலின் போது விரைவில் கொண்டுவர உள்ள டிஜிட்டல் இந்தியா சட்டத்தின் இலக்கு மற்றும் வடிவமைப்புக் கொள்கைகளை எடுத்துரைத்தார்.
Information Technology Act (IT Act- 2000) தற்போது நடைமுறையில் உள்ள நிலையில் பெருகி உள்ள இணைய வசதிக்கேற்ப புதிய அம்சங்களை உள்ளடக்கிய டிஜிட்டல் இந்தியா மசோதாவினை (Digital India Bill) விரைவில் அமல்படுத்தும் வகையில் அதுக்குறித்து இணைய வல்லுனர்கள், நிறுவனங்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பங்கேற்று முன்மொழியப்பட்ட சட்ட வரைவுகள் குறித்து எடுத்துரைத்தார். அவற்றின் விவரங்கள் பின்வருமாறு-
மசோதாவின் முக்கிய நோக்கமானது டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரத்தை இந்தியா எட்டுவதை அடிப்படையாக கொண்டுள்ளது. அதே நேரத்தில், டிஜிட்டல் பயன்பாட்டு வகையான தயாரிப்புகள், சாதனங்கள், உலகளாவிய அளவில் இயங்குதளங்களுக்கான குறிப்பிடத்தக்க நம்பகத்தன்மையினை உறுதி செய்வதுடன், இணையம் தொடர்பான குற்றங்களுக்கு தீர்வுகளை கண்டறியும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் இந்தியா மசோதாவின் பின்னணியில் உள்ள நோக்கங்கள் மற்றும் யோசனைகளை முன்வைத்து பேசிய இணை அமைச்சர், புதிய சட்டம் தொடர்பாக பொது கலந்தாய்வு நடைபெறுவது இதுவே முதல் முறை எனவும் குறிப்பிட்டார்.
தற்போதைய வளர்ச்சியடைந்த டிஜிட்டல் உலகில், பெருகி வரும் ஆன்லைன் குற்றங்கள், இணையப் பாதுகாப்பு, வெறுப்பு பேச்சு, தவறான தகவல் மற்றும் போலிச் செய்திகள் போன்றவற்றை பழைய சட்டங்களால் எதிர்க்கொள்ள இயலாத சவால்களையும் கருத்தில் கொண்டு புதிய சட்ட மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. சட்ட மசோதா வரைவிற்காக தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒரு முக்கிய குழு இதில் பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார். இந்த குழுவானது, மற்ற நாடுகளிலுள்ள இணையம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான சட்டங்களுடன் ஒப்பீட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. உலகளாவிய நாடுகள் எதிர்க்கொள்ளும் இணைய சிக்கல்களையும் கவனத்தில் கொண்டு, அரசின் கொள்கை, தொழில்நுட்ப நிபுணர்களின் ஆலோசனைகள் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு சட்ட மசோதா உருவாக்கப்படுகிறது என்றார்.
சட்ட மசோதாவின் முக்கிய நோக்கமாக கருதப்படுவது- இணைய ஒழுங்குப்படுத்தலை முறைப்படுத்த முயச்சிக்கிறது. மேலும், சட்ட காரணங்களுக்காக ஒரு நபரின் தனிப்பட்ட தகவல்களை எவ்வளவு தூரம் அணுகலாம் என்கிற வரம்பினை தீர்மானிக்கிறது. பயனாளர்களிடமிருந்து தரவுகளை சேகரிப்பதற்கான தேவையினை குறிப்பிடும் வகையில் புதிய சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக சைபர்பீஸ் அறக்கட்டளையின் (CyberPeace Foundation) நிறுவனர் மேஜர் வினீத் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க :
வேகமெடுக்கும் இன்புளூயன்சா காய்ச்சல்- தமிழகம் முழுவதும் 1000 சிறப்பு மருத்துவ முகாம்
சென்னையில் தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு முகாம்- யாரெல்லாம் பங்கேற்கலாம்?
Share your comments