திண்டுக்கல் மாவட்டத்தில் ரோட்டோரங்களில் சிம்கார்டுகள் விற்போர் ஒரே முகவரியில் பல கார்டுகளை ஆக்டிவேட் செய்து, அதனை ஆவணங்கள் இன்றி வெளி நபர்களுக்கு அதிக விலைக்கு விற்பதால் சமூக விரோத செயல்களுக்கு துணை போகும் அவலம் தொடர்கிறது. மாவட்டத்தில் நகர்களின் முக்கிய இடங்கள் , சாலையோரங்களில் சிலர் சிம் கார்டுகளை விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு விற்பனை செய்யும் நபர்களுக்கு சிம் கார்டு நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவு கமிஷன் தருகிறது.
போலி சிம்கார்டு (Fake Sim Card)
சிம்கார்டு விற்கும் நபர்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அந்த பதிவை சிம்கார்டு விற்பனைக்கு தரும் நிறுவனங்களே பதிவு செய்கின்றன. இவர்களின் முகவரிகள், ஏஜென்ட் இருப்பிடங்கள் வேறு இடத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். இவர்களோ முக்கிய பகுதி ரோட்டோரங்களில் குடை அமைத்து அதன் கீழ் வியாபாரம் செய்கின்றனர். சிம் கார்ட் வாங்க வரும் கிராம மக்கள் ஆதார் கார்டு, போட்டோ உள்ளிட்ட ஆவணங்களை சாலையோர நபர்களிடம் ஒப்படைக்கும்போது , ஒரு சிம் கார்டை ஆக்டிவேட் செய்வது மட்டுமில்லாமல் ஒன்றுக்கு மேற்பட்ட சிம்கார்டுகளை அதே முகவரில் ஆக்டிவேட் செய்து வைத்து கொள்வர்.
விழிப்புணர்வு (Awareness)
சம்பந்தப்பட்ட நபருக்கு ஒரு சிம் கார்டு மட்டும் வழங்கிவிட்டு ,வெளியூர், உள்ளூரில் உள்ள அடையாளம் தெரியாத நபர்களுக்கு எவ்வித ஆவணம் இன்றி அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதன் மூலம் சமூக விரோத செயல்களுக்கு தங்களை அறியாமலே துணை போகின்றனர். சிம்கார்டு வாங்குவோர், வழங்கும் ஆதாரங்களை ஒரே சிம்கார்டுக்கு மட்டும் பயன்படுத்துகிறாரா என்பதை உறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற நபர்களை அணுகாமல் நிரந்தரமாக உள்ள கடைகளில் சிம்கார்டுகளை பெற வேண்டும். இது தொடர்பாக மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு போலீசாரும் இதை கண்காணிக்க வேண்டும்.
சாலையோரங்களில் விற்கப்படும் சிம்கார்டுகளின் உண்மை தன்மை குறித்து போலீசார் தெரிந்து, போலி சிம் கார்டுகளை விற்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிம்கார்டுகள் விற்க பதிவு செய்யப்படும் ஏஜென்ட் முகவரிகளை தவிர, வேறு இடங்களில் சிம் கார்டுகளை ஆக்டிவேட் செய்ய நிறுவனங்கள் முன்வரக்கூடாது. இதனை ஜி.பி.எஸ்., முறையில் கண்காணிக்க வேண்டும். பொதுமக்களும் இதுபோன்ற நபர்களிடம் சிம் கார்டுகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும். இதனால் சமூக விரோத செயல்கள் தவிர்க்கப்படுவதுடன் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
மேலும் படிக்க
Share your comments