வங்கக் கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை, திருநாவலூர், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பெய்த மழையால் கடைகளில் மழை நீர் புகுந்தது. சிவகங்ககை மாவட்டம் மானாமதுரை, திருபுவனம், காரைக்குடி, தேவகோட்டை ஆகிய இடங்களில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, ஆவுடையார் கோவில், மஞ்சக்கொடி உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை கொட்டித் தீர்த்தது.
கும்பகோணம் சுற்றுவட்டார ஊர்களான நாச்சியார் கோவில், திருனாகேஸ்வரம், பட்டீஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் திடீரென பலத்த மழை பெய்தது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், குத்தாலம், வைத்தீஸ்வரன், செம்பனார் கோவில், மணல்மேடு உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுற்று வட்டாரங்களில் மிதான மழை பெய்தது. சேலம் மாவட்டம் ஆலம்பாடி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும் 10 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்றைய நிலவரம் படி சேலம் மாவட்டம் அரியலூர், மேட்டூர், கடலூர் மாவட்டம் தொழுதூர் ஆகிய இடங்களில் தலா 7 செ. மீ மழையும், விருதுநகர் மாவட்டம் கோவிலங்குளம், விருதுநகர், நாமாக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆகிய இடங்களில் தலா 6 செ. மீ மழையும், சிவகங்கை மாவட்டம் திருபுவனம், மதுரை மாவட்டம் சோழவந்தான், அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம், நீலகிரி மாவட்டம் தேவாலா ஆகிய இடங்களில் தலா 5 செ. மீ மழையும் பதிவாகியுள்ளது.
K.Sakthipriya
krishi Jagran
Share your comments