ஒரு ஏக்கருக்கு செய்யும் செலவை குறைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என விவசாயிகளுக்கு ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, டிசம்பர் 6 புதன்கிழமை அன்று, க்ரிஷி ஜாக்ரனின் இந்தியாவின் மில்லியனர் விவசாயி விருது வழங்கும் நிகழ்வின் (Millionaire Farmer of India Awards) முதன்மை விருந்தினராகப் பங்கேற்று MFOI kisan Bharat yatra-வையும் தொடங்கி வைத்தார்.
மஹிந்திரா டிராக்டர்ஸ் வழங்கும் இந்தியாவின் மில்லினியர் ஃபார்மர் விருதுகள் (டிசம்பர் 6, 2023) புதன்கிழமையான நேற்று புதுதில்லியில் உள்ள ஐஏஆர்ஐ, மேளா மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கியது. விருது நிகழ்வுடன் வேளாண் கண்காட்சியும் நடைப்பெறும் நிலையில் மஹிந்திரா டிராக்டர்ஸ் அதன் சிறந்த மாடல்களை கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளது.
நேற்றைய தினம் மாவட்ட அளவிலான விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்று விவசாயிகளுடன் கலந்துரையாடினார். நிகழ்வில் அவர் பேசிய கருத்துகள் பின்வருமாறு-
"விவசாயிகளின் சாதனைகள் அங்கீகரிக்கப்படுவதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். விவசாயிகளின் பொருளாதார நிலையை மாற்ற எங்கள் அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது" என்றார். இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார் என மேற்கோள் குறிப்பிட்ட அமைச்சர், ”பொருளாதார சூழ்நிலையால் 25-30 சதவீத கிராம மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்காததால் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். விவசாயிகளின் உற்பத்திக்கு உரிய விலை கிடைப்பதில்லை."
"உலகளாவிய தேவை மற்றும் விநியோகத்தின் இருப்பு கணக்கிடப்பட வேண்டும். கோதுமை மற்றும் அரிசி வழங்கல் சமீபத்தில் அதிகரித்துள்ளது. பயிர்களின் உலகளாவிய கண்ணோட்டத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஏக்கரில் 11 குவிண்டால் சோயாபீன் பயிரிட்டதற்காக என் மனைவிக்கு விருது கிடைத்தது. அமெரிக்கா 1 ஏக்கரில் 30 குவிண்டால், அர்ஜென்டினாவில் 45 குவிண்டால், பிரேசிலில் 26 உற்பத்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது".
"நாம் நல்ல அளவு கோதுமை மற்றும் அரிசியை பயிரிடுகிறோம், ஆனால் தேவை மற்றும் விநியோகம் சரியாக நிர்வகிக்கப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளில், உரங்கள் மற்றும் சிமென்ட் விலைகள் அதிகரித்துள்ளன, ஆனால் கோதுமை மற்றும் அரிசி விலை மாற்றமில்லை. நம் நாட்டில் ஒரு ஏக்கருக்கு ஆகும் உற்பத்தி செலவு அதிகம். நானோ யூரியாவினை கைகளால் பயன்படுத்தும் போது 75 சதவிகிதம் வீணாகிறது மற்றும் 25 சதவிகிதம் மட்டுமே பயிரால் உறிஞ்சப்படுகிறது. அதே நேரத்தில் உரத்தினை தெளிக்கப்படும்போது அவற்றின் பலன் நேர்மாறாக இருக்கிறது. எனவே ஒரு ஏக்கருக்கான உற்பத்தி செலவைக் குறைக்க விவசாயிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் பரிந்துரைத்தார்."
"கோதுமை, அரிசி, கரும்பு ஆகியவை உங்களை பணக்காரர்களாக மாற்ற முடியாது” என தனது உரையில் தெரிவித்த நிதின் கட்கரி, மில்லினியர் விவசாயிகளுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கவும் செய்தார். அதனைத் தொடர்ந்து MFOI kisan Bharat yatra-வையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். MFOI kisan Bharat yatra-வானது 26,000 கி.மீ தூரம், 4520-க்கும் மேற்பட்ட சந்திப்பு இடங்கள் என இந்த யாத்திரை இந்தியா முழுவதும் பயணித்து பல லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளிடம் மில்லினியர் விவசாயிகளின் வெற்றிப் பாதையை காண்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் காண்க:
Share your comments