தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வரும் 30ம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும், ஒரு நாளைக்கு 300 டோக்கன்கள் வீட்டிற்குச் சென்று வழங்கப்படும் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏழை-எளிய மக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
ரூ.2,356 கோடி
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இவை வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 2 கோடியே 19 லட்சம் பேர் பயன் அடைவார்கள் என்றும், இதற்காக அரசுக்கு சுமார் ரூ.2,356 கோடி செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 பெறுவதற்கு ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க வழக்கம்போல டோக்கன் முறை செயல்படுத்தப்படுகிறது. எந்தெந்த தெருவில் உள்ளவர்கள் எந்த தேதியில் பெற வேண்டும் என டோக்கனில் குறிப்பிடப்பட்டு வீடுகளுக்கு வழங்கப்படும்.
விபரம்
பொங்கல் பரிசு தொகை பெறும் நாள், நேரம் போன்றவற்றை குறிப்பிட்டு ஒவ்வொரு வீடாக இதனை ரேஷன் கடை ஊழியர்கள் வழங்குவார்கள். அந்த நாளில் கடைகளில் நெரிசல் இல்லாமல் பணத்தை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படுகிறது.
அமைச்சர்கள் தகவல்
இந்நிலையில், அமைச்சர் பெரியகருப்பன், அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வரும் 30ம் தேதி முதல் வழங்கப்படும் வரும் 30, 31 மற்றும் ஜனவரி 2, 3, 4 ஆகிய தேதிகளில் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும். ஒரு நாளைக்கு 300 டோக்கன்கள் வீட்டிற்குச் சென்று வழங்கப்படும். சூழ்நிலைக்கு ஏற்ப மாவட்ட ஆட்சியர்கள் டோக்கன் வழங்குவது குறித்து முடிவுசெய்வார்கள். கரும்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க…
காய்கறி சாகுபடிக்கு ரூ.80,000 மானியம்- தொடர்பு தொலைபேசி எண்கள் அறிவிப்பு!
Share your comments