அரசு பஸ் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு இனி, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார். அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தத்துக்கான ஏழாம் கட்ட பேச்சு, நேற்று சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து பயிற்சி மைய வளாகத்தில் நடந்தது. அதில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், செயலர் கோபால், நிதித் துறை கூடுதல் செயலர் அருண் சுந்தர் தயாளன், தொழிலாளர் தனி இணை கமிஷனர் லட்சுமிகாந்தன் ஆகியோர், ஊதிய ஒப்பந்த கூட்டு குழுவினர், தொழிற்சங்கத்தினருடன் பேச்சு நடத்தினர்.
அடிப்படை ஊதியம் (Basic Salary)
அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி: போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, 14வது ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2019ன்படி உள்ள நிரந்தர தொழிலாளர்களுக்கு, 'பே மேட்ரிக்ஸ்' எனும் மூத்தோர், இளையோர் விகிதத்தின் அடிப்படையில், 5 சதவீத உயர்வு அளித்து, அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படும்.
இதன்படி, தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்சமாக 1,000 ரூபாயும், அதிகபட்சமாக 7,000 ரூபாயும் உயர்வு கிடைக்கும். சலவை, 'ஷிப்ட், ஸ்டியரிங்' மற்றும் இரவு தங்கல் உள்ளிட்டவற்றுக்கான படிகள் உயர்த்தப்பட்டுள்ளன. அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும், ஒரே வழிகாட்டுதலுக்கான நிலையாணை நடைமுறைப்படுத்தப்படும்.
மலைப் பகுதிகளில் பணிபுரிவோருக்கு, மாதம் 3,000 ரூபாய் படி வழங்கப்படும். இறந்த பணியாளரின் குடும்ப நலநிதி, 4 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். இனி ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் நான்கு ஆண்டுகளாக மாற்றப்படும் என அவர் கூறினார்.
மேலும் படிக்க
ஓட்டுநர் உரிமம் இருந்தால் மட்டுமே இன்சூரன்ஸ்: ஐகோர்ட் அதிரடி!
Share your comments