பல இடங்களில் வெப்பநிலையானது 40 டிகிரி செல்சியஸை மீறியதைத் தொடர்ந்து ஓடிசா மாநிலம் முழுவதும் 10 வகுப்பு வரை அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களை ஏப்ரல் 16 வரை மூடுவதாக ஒடிசா அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
ஜப்பானில் இருந்து மாநிலத்திற்கு திரும்ப வந்த முதல்வர் நவீன் பட்நாயக், வெப்ப அலை நிலையை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பத்தாம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமை வரை மூட உத்தரவிட்டார்.
பஞ்சாயத்து ராஜ் மற்றும் குடிநீர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் எரிசக்தி துறைகள் முழுமையாக தயாராக இருக்குமாறு முதல்வர் அறிவுறுத்தினார். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் சிறப்பு கவனம் செலுத்தி நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் சீரான குடிநீர் விநியோகம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
ஏழு இடங்களில் அதிகபட்ச நாள் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியதால், அடுத்த சில நாட்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ளது. இச்சமயத்தில் மின் வெட்டு ஏற்படாமல் தொடர்ந்து மின்சாரம் வழங்குவதை உறுதிசெய்யவும் நவீன் எரிசக்தி துறைக்கு உத்தரவிட்டார்.
ஏப்ரல் 13 முதல் 15 வரை வடக்கு, மேற்கு மற்றும் மத்திய ஒடிசா மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். IMD இன் படி, பரிபாடா பகுதியில் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியது, அதைத் தொடர்ந்து ஜார்சுகுடா 41.2 டிகிரி மற்றும் சம்பல்பூர் 40.8 டிகிரி, புவனேஸ்வரில் 40.7 டிகிரி செல்சியஸைத் தொட்டது. பௌத், திட்லாகர், அங்குல், கட்டாக் மற்றும் சுந்தர்கர் ஆகிய இடங்களிலும் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
வடமேற்கு மற்றும் மேற்கு வறண்ட காற்று மற்றும் அதிக சூரிய ஒளியின் ஓட்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அடுத்த நான்கு நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை மூன்று முதல் நான்கு டிகிரி வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். சுந்தர்கர், கியோஞ்சர், மயூர்பஞ்ச், பாலசோர், ஜார்சுகுடா, சம்பல்பூர், அங்குல், பௌத் மற்றும் தியோகர் ஆகிய இடங்களில் ஏப்ரல் 13 முதல் 15 வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று தேசிய வானிலை முன்னறிவிப்பாளர் தெரிவித்துள்ளார். காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மக்கள் வெளியில் செல்லும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஐஐடி புவனேஸ்வரில் உள்ள பூமி, கடல் மற்றும் காலநிலை அறிவியல் பள்ளியின் இணை பேராசிரியர் சந்தீப் பட்நாயக் கூறுகையில், வடமேற்கில் இருந்து பாயும் சூடான காற்று ஒடிசா கடற்கரைக்கு அருகில் திரும்புகிறது மற்றும் கடலில் இருந்து பாயும் ஈரமான காற்றுடன் தொடர்பு கொள்கிறது.
இது புவனேஸ்வரில் வெளிப்படையான வெப்பநிலை தாக்கத்தை உண்டு பண்ணுகிறது மற்றும் அதிக வெப்ப அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. புவனேஸ்வர் தவிர, கடலோர மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இதுபோன்ற நிலை அடுத்த சில நாட்களுக்கு நிலவும்” என்றார்.
Share your comments