ரூ.18 கோடி செலவில் மறுசீரமைக்கப்பட்ட செனாய் நகர் திரு.வி.க. பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நேற்று திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (4.4.2023) சென்னை செனாய் நகரில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் நிதியுதவியுடன், மெட்ரோ இரயில் நிறுவனத்தால் மெட்ரோ இரயில் கட்டுமானத்திற்குப் பின்னர் 18 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் திரு.வி.க. பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-I மொத்தம் 45.1 கி.மீ நீளத்திலான இரண்டு வழித்தடங்களைக் கொண்டது. இதில் வழித்தடம்-2 சென்னை சென்ட்ரலிலிருந்து தொடங்கி செனாய் நகரிலுள்ள திரு.வி.க பூங்காவிற்கு கீழே பூமிக்கு அடியில் செல்கிறது. செனாய் நகரில் மெட்ரோ இரயில் நிலையம் அமைப்பதற்காக திரு.வி.க. பூங்காவின் சில பகுதிகள் எடுக்கப்பட்டது. செனாய் நகர் சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையம் செனாய் நகர் மற்றும் அமைந்தகரை பகுதி மக்களுக்கு பெரிதும் பயன்பட்டு வருகிறது.
சீரமைக்கப்பட்ட திரு.வி.க. பூங்காவின் சிறப்பம்சங்கள்
இப்பூங்காவில், தொடர் நடைபாதைகள், சறுக்கு வளையம், பூப்பந்து அரங்கு, கடற்கரை கைப்பந்து அரங்கு, கூடைப்பந்து அரங்கு, கிரிக்கெட் வலைபயிற்சி, திறந்தவெளி உடற்பயிற்சி, 8 வடிவமைப்புடன் நடைபாதை, சிறுவர்கள் விளையாடுமிடம், திறந்தவெளி அரங்கம், யோகா மையம், உருவச் சிலைகள் மற்றும் படிக்கும் பகுதி போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், மிகவும் அரிய வகை மற்றும் பழமையான மரங்கள் பூங்காவின் வேறு இடத்திலிருந்து எடுக்கப்பட்டு, ஓரப்பகுதியில் வேருடன் நடப்பட்டுள்ளன. பூங்காவின் உட்பகுதியில் ஆழமாக வேர்கள் செல்லும் மரங்களும் நடப்பட்டுள்ளன. தற்போது பூங்காவில் சுமார் 2400 மரங்கள் நடப்பட்டு நன்கு வளர்ந்துள்ளன.
தமிழறிஞரும், சுதந்திர போராட்ட வீரருமான திரு.வி.கலியாண சுந்தரனார் பெயரில் திரு.வி.க பூங்கா அமைந்துள்ளதால், தமிழுக்கு அவரது பங்களிப்பு மற்றும் சுதந்திர போராட்டத்தில் அவரது பங்கேற்பு ஆகிய கருப்பொருள் குறித்து இரண்டு சுவர் சித்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இப்பூங்காவில், 3 மீட்டர் அகலம் மற்றும் 12 மீட்டர் உயரமுள்ள 12 விளக்குகள், இரவு நேரங்களில் புல்வெளிப் பகுதிக்கு வெளிச்சத்தை வழங்கிடும் வகையில் நடைபாதையையொட்டி அலங்கார விளக்குகள், வண்ண விளக்குகள் மற்றும் இசையுடன் கூடிய நீருற்றுகள், பொதுமக்கள் பயன்படுத்தும் பகுதி, பூந்தோட்டங்கள், அனைத்து பகுதிகளிலும் விளக்குகள், இருக்கை வசதிகள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி உட்பட சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் காண்க:
நிலக்கரி எடுக்கும் முடிவு- வேளாண் அமைச்சர் முதல் விவசாயிகள் வரை அளித்த பதில் என்ன?
Share your comments