காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 79.
கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உம்மன் சாண்டியின் உயிரிழந்தாக அவரது மகனும், காங்கிரஸ் தலைவருமான சாண்டி உம்மன், அதிகாலை 4.30 மணியளவில் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.
இதனையொட்டி கேரளாவில் செவ்வாய்க்கிழமை இரண்டு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று பொது விடுமுறையும் அறிவித்துள்ளது கேரள அரசு.
பெங்களூருவில் மரணமடைந்த சாண்டியின் உடல் விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவரது உடல் காங்கிரஸ் மாநில கமிட்டி அலுவலகத்திலும், பின்னர் மக்கள் அஞ்சலிக்காக தலைமைச் செயலகத்தின் தர்பார் மண்டபத்திலும் வைக்கப்படும். பின்னர் அவரது இறுதிச்சடங்கு கோட்டயத்தில் உள்ள புதுப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாண்டி ஒரு திறமையான நிர்வாகி என்றும், மக்களின் வாழ்க்கையோடு நெருங்கிய நபர் என்றும் தற்போதைய கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியும் சாண்டியின் மறைவு குறித்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள குறிப்பில் “பொது சேவைக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்து, கேரளாவின் முன்னேற்றத்திற்காக உழைத்த பணிவான மற்றும் அர்ப்பணிப்புள்ள தலைவரை இழந்துவிட்டோம்” என குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவின் பிரபலமான அரசியல் தலைவர்களில் ஒருவரான சாண்டி, 2004 முதல் 2006 வரை மற்றும் 2011 முதல் 2016 வரை மாநிலத்தின் முதலமைச்சராகவும், 2006 முதல் 2011 வரை கேரள சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மக்கள் மத்தியில் வெகுஜனத் தலைவராக அறியப்பட்ட சாண்டி, மாநில அரசியலில் யாரும் நிகழ்தாத சாதனைக்கு சொந்தக்காரர்.
1970 -ல் நடந்த சட்டசபை தேர்தலில் புதுப்பள்ளி தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியவர் இறக்கும் வரை அதே தொகுதியில் தான் போட்டியிட்டார். போட்டியிட்ட அத்தனைத் தேர்தலிலும் வெற்றி வாகை சூடி அரிய சாதனையினை நிகழ்த்தினார். 2021 சட்டமன்றத் தேர்தலில் புதுப்பள்ளி தொகுதியில் சாண்டி வெற்றி பெற்றது, அதே தொகுதியில் அவர் பெற்ற 12-வது வெற்றியாகும்.
மத்திய கேரளாவில் காங்கிரஸ் அரசியலின் முக்கிய ஆதாரமான சாண்டி, 1943 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி புதுப்பள்ளியில் பிறந்தார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான கேரள மாணவர் சங்கம் மூலம் அரசியலில் இறங்கினார். சட்டப் படிப்பு பயின்ற உம்மன் சாண்டி, கேரளாவில் இளைஞர் காங்கிரஸின் முக்கிய தலைவராக ஆனார். பின்னர் 1969 இல் அதன் மாநிலத் தலைவராக உயர்ந்தார். உம்மன் சாண்டிக்கு மரியம்மா என்ற மனைவியும், மரியா உம்மன், சாண்டி உம்மன், அச்சு உம்மன் ஆகிய பிள்ளைகளும் உள்ளனர்.
பெங்களூருவில் இன்று பாஜக தலைமையிலான கூட்டணிக்கு எதிராக மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், லாலு பிரசாத், அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி என பல தலைவர்கள் வருகிற நாடாளுமன்ற தேர்தலை எதிர்க்கொள்வது குறித்து கலந்தாலோசிக்க உள்ளனர். இக்கூட்டத்திற்கு பின் அவர்கள் இறுதி மரியாதை செலுத்துவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் காண்க:
Share your comments