மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதியில், வரும் 9ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழைக் கொட்டி வருகிறது. இதனால் பல இடங்களில் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்குள் வெள்ளம்
நீலகிரியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கூடலூரில் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனையடுத்து, அப்பகுதியில் வசித்த 250 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழை பொழிவு (District Rainfall)
இன்று காலை வரை அவலாஞ்சியில் 346 மி.மீ., கூடலூரில் 349 மி.மீ., தேவாலா 360 மி.மீ., மேல்கூடலூர் 330 மி.மீ., மழை பெய்துள்ளது.
இதனிடையே, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்மேற்கு பருவமழை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தீவிரம் அடைந்திருப்பதால், அடுத்த 24 மணி நேரத்திற்கு, நீலகிரி மாவட்டத்தின் மலைச்சரிவு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய அதிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மிக கன மழை எச்சரிக்கை (Heavy heavy rain)
மேலும் கோவை, தேனி மாவட்டங்களின் மலைப்பகுதியில், கன மழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், திருப்பூர், திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான
மழை பெய்யும்.
சென்னை வானிலை (Chennai weather)
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning For Fisherman)
-
இன்று குமரிக்கடல் மற்றும் மன்னார்வளைகுடாப் பகுதிகளில், பலத்த சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இன்று முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை கிழக்கு அரபிக்கடலை ஒட்டிய கேரளா- கர்நாடகா பகுதிகள், கொங்கண் கோவா, மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில், மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்தக் காற்று வீசக்கூடும்
-
இன்று முதல் 10ம் தேதி வரை தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இதனால் மீனவர்கள் யாரும் இப்பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை (Flood Warning)
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அப்பர்பவானி, அவலாஞ்சி, குந்தா, எமரால்டு ஆகிய அணைகளின் நீர்மட்டம் வெகமாக உயர்ந்து வருகிறது.
89 அடி கொள்ளவை கொண்ட குந்தா அணை முழு கொள்ளவை எட்டியுள்ளதால் அணையிலிருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
இதனிடையே மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதியில், வரும் 9ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...
மழைக்காலங்களில் பாம்புகளின் நடமாட்டம் அதிகரிக்கும் -விவசாயிகள் கவனத்திற்கு!
மலர் சாகுபடி செய்ய விருப்பமா? பயிற்சி அளிக்கிறது வனவியல் கல்லூரி!
Share your comments