மத்திய அரசின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) ஓய்வூதியதாரர்களுக்கு தபால்காரர் மூலம் அவர்களின் வீட்டிற்கே சென்று இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலமாக டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்றிதழை (ஆயுள் சான்றிதழ்) சமர்ப்பிக்கும் சேவையை இந்திய அஞ்சல் துறை வழங்குகிறது. நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக, ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம், அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே கைவிரல் ரேகையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
உயிர்வாழ் சான்றிதழ் (Life Certificate)
இந்நிலையில், நடப்பாண்டில் 31.10.2022 வரையில் மொத்தம் 5,27,286 உயிர்வாழ் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 2,38,811 சான்றிதழ்கள் தமிழ்நாட்டிலும், 2003 சான்றிதழ்கள் புதுச்சேரியிலிருந்தும் வழங்கப்பட்டுள்ளன. இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிச் சேவைகள், ஓய்வூதியம் மற்றும் பிற 'நேரடிப் பலன் பரிமாற்றம்' திட்டங்களை வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலுக்கு எடுத்துச் சென்றுள்ளது. 0-5 வயது வரையிலான குழந்தைகளுக்கான ஆதார் பதிவு வசதியும் இதேபோல் வழங்கப்படுகிறது.
மேலும், இந்தியா போஸ்ட் வெப் போர்டலில் முன்பதிவு செய்த சில்லறை வாடிக்கையாளர்களுக்கு பதிவு அஞ்சல் மற்றும் விரைவு அஞ்சல் ஆகியவற்றை தேர்ந்தெடுக்கப்பட்ட தபால் அலுவலகங்கள் மூலம் வீட்டிற்கு வந்து எடுத்து செல்லும் (பிக்-அப்) வசதியை தபால் துறை தொடங்கியுள்ளது. மக்களவையில் இன்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும். இந்திய அஞ்சல் துறையின்சார்பில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) நாடு தழுவிய அளவில் 2018 செப்டம்பர் 1ஆம் தேதி துவங்கப்பட்டு, இந்த குறுகிய காலத்தில் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ள 136000 அஞ்சலகங்களுக்கு வங்கி சேவைகளை விரிவுபடுத்தி 5 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பு கணக்கு துவங்கியுள்ளது.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெற்றுள்ளனர்.
மேலும் படிக்க
விதவைப் பெண்களுக்கு பென்சன் திட்டம்: மாதம் ரூ.1000 கிடைக்கும்!
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்: ஓலை, கூரை வீடுகள் கணக்கெடுப்பு!
Share your comments