நீர் நிலைகளில் வெடி மருந்துகளைப் பயன்படுத்தி மீன் பிடித்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ள சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம் உத்தரவிட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணைப் பகுதியில் மீன்வளத்துறையின் மூலம் மீனவர்களுக்கு மீன்பிடி உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு மீன்பிடி உரிமம் பெற்றவர்கள் அனுமதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மீன் பிடித்து வருகின்றனர். அனுமதிக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றாத மீனவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, மீன்பிடி உரிமம் இரத்து செய்யப்படும் என ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணைப் பகுதிகளைத் தவிர பிற பகுதிகளான காவிரி ஆற்றங்கரை, சரபங்கா உள்ளிட்ட பல்வேறு நீர் நிலைப் பகுதிகளிலும் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மீன் பிடித்து வருகின்றனர். அவ்வாறு மீன்களைப் பிடிக்க தூண்டில், மீன் வலைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துகின்றனர். நீர் நிலைப் பகுதிகளில் சிலர் சட்டத்திற்குப் புறம்பான வகையில் வெடி மருந்துகள் அடங்கிய பொருட்களைப் பயன்படுத்தி மீன்களைப் பிடிப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வரப்பெற்றுள்ளது. இந்நிலையில் புகார் குறித்து மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-
வெடிப்பொருட்களைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதால் எதிர்பாராத விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பாக அமைகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் யாரேனும் சட்டத்திற்குப் புறம்பான வகையில் வெடிப்பொருட்களையோ அல்லது தடை செய்யப்பட்ட மீன் வலைகளையோ பயன்படுத்தி மீன் பிடித்தால் அவர்கள் மீது காவல் துறையின் மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், அனுமதியின்றி வெடிப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் குறித்தோ, சட்டத்திற்குப் புறம்பான வகையில் மீன் பிடிப்பவர்கள் குறித்தோ, தகவல் தெரிந்தால் மீன்வளத்துறை உதவி இயக்குநரை (04298-244045) என்ற அலைபேசி எண்ணிலோ அல்லது மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் (1077 அல்லது 0427-2452202, 2450498, 2417341) ஆகிய தொலைபேசி எண்களிலோ, வருவாய் துறை அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திலோ பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த காலத்தில் விசைப்படகுகள் மூலம் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். தற்போது தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருக்கும் சூழ்நிலையில் ஆற்றங்கரை, அணைகள் போன்ற நீர் நிலைப்பகுதிகளில் வரம்புகளை மீறி மீன்பிடிப்பது அதிகரித்து வருகிறது.
pic courtesy : UNEP
மேலும் காண்க:
Share your comments