கரீஃப் பருவப் வெங்காய வரத்து குறைவு காரணமாக விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நுகர்வோரைப் பாதுகாக்கும் வகையில், வெங்காயம் கிலோ ஒன்றினை ரூ.25 என்ற மானிய விலையில் விற்பனை செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இன்று முதல் தமிழகத்திலும் முதற்கட்டமாக 14 மையங்கள் மூலம் ரூ.30/கிலோ என்ற அளவில் வெங்காயத்தை விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்திய உணவு தயாரிப்பு முறைகளில் தவிர்க்க முடியாத ஒன்று வெங்காயம். அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயத்தின் விலை கடந்த ஒரு சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழக அரசின் நடவடிக்கை:
இதனைத் தொடர்ந்து, வெங்காயத்தை குறைந்த விலையில் விற்பனை செய்ய தமிழக அரசு முன்வந்துள்ளது. இதுத்தொடர்பான செய்தி அறிவிப்பினை தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் வெளியிட்டுள்ளார். அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விவரம் பின்வருமாறு: பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயத்தினை விற்பனை செய்திட தமிழ்நாடு அரசு வெங்காயத்தின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கிய அறிவுறுத்தலின் படி ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பாதிப்படையாமல் இருக்க கூட்டுறவுத்துறையின் மூலமாக முதற்கட்டமாக சென்னையில் செயல்பட்டு வரும் 10 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 4 நடமாடும் விற்பனை வாகனங்கள் என 14 மையங்கள் மூலம் இன்று முதல் (05.11.2023) வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. தற்பொழுது உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கூட்டுறவுத்துறையின் மூலமாக பண்ணை பசுமை காய்கறி கடைகள் மூலம் கிலோ ஒன்றிற்கு ரூ.30/- வீதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், தேவைக்கேற்ப தமிழ்நாட்டில் உள்ள பிற பகுதிகளிலும் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குறுகிய காலத்திற்குள் வெங்காயம் விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அரசு முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன், தான் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின் நடவடிக்கை:
வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசின் சார்பில், நுகர்வோர் நலத் துறை, இந்திய தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு (என்.சி.சி.எஃப்), இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைக் கூட்டமைப்பு (NAFED), மத்திய பண்டகசாலை, மாநில கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களால் இயக்கப்படும் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வேன்கள் மூலம் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.25 என்ற மானிய விலையில் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் சிரமம் சற்று குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கடந்த ஜுலை -செப்டம்பர் மாதங்களில் இதேப்போல் தக்காளி விலை கடும் விலை உயர்வை சந்தித்தப்போதும் மத்திய, மாநில அரசுகளால் நேரடியாக விவசாயிகளிடம் விளைப்பொருள் கொள்முதல் செய்யப்பட்டு குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் காண்க:
YSR Achievement விருதினை வென்று கவனத்தை ஈர்த்த பழங்குடியின பெண் விவசாயி!
நவ 6 முதல் 21 நாட்களுக்கு இலவச தடுப்பூசி- கால்நடை விவசாயிகளே மிஸ் பண்ணாதீங்க
Share your comments