தக்காளி விலை உயர்வு தொடர்ந்தால், ரேசன் கடைகளிலும் கூட விற்பனை செய்ய தயாராக இருக்கிறோம் என அமைச்சர் பெரியகருப்பன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தக்காளி விலை எதிர்பாராத விலை ஏற்றத்தை சந்தித்துள்ள நிலையில், பண்ணை பசுமை கடைகளில் கிலோ ஒன்றுக்கு 60 முதல் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ரேசன் கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனை செய்ய தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவர் பேட்டியின் முழு விவரம் பின்வருமாறு-
கோடைக்காலத்தில் நிலவிய அதீத வெப்பத்தின் காரணமாக தக்காளி பயிர்கள் பாதிக்கப்பட்டதாக சில விவசாயிகள் கூறுகின்றனர். சமீபத்தில் பல பகுதிகளில் பெய்த ஆலங்கட்டி மழையும் தக்காளி விளைச்சல் குறைய காரணமாக இருந்தது என சிலர் குறிப்பிட்டுள்ளனர். மேலும் 4,5 மாதங்களுக்கு முன்பு விளைவித்த தக்காளிக்கு சந்தையில் உரிய விலை கிடைக்காத காரணத்தினால் பயிரிடுவதையும் தவிர்த்துள்ளனர்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் பெருமளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. நமது மாநில தேவையை தவிர்த்து கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலிருந்தும் தக்காளி வாங்கப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 800 டன் தக்காளி வந்த நிலைமை மாறி 300 டன்னாக குறைந்தது. இன்று கேட்டபோது கூடுதலாக வந்துள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள், வியாபாரிகள் என இருவரிடமும் தக்காளி வாங்குகிறோம். எங்களுடைய நோக்கம் நுகர்வோருக்கு சரியான விலையில் தக்காளி கிடைக்க வேண்டும் என்பது தான். பண்ணை பசுமை கடைகள் குறைவாக இருக்கும் சூழ்நிலையில், தொடர்ந்து தக்காளி விலை உயர்வு நீடித்தால் நாங்கள் அனைவருக்கும் எளிதாக கிடைக்கும் வகையில் நியாயவிலைக்கடை மூலமாக விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம். ஆனால் அந்தளவிற்கு நிலைமை மோசமாக போகாது என நம்புகிறோம்” எனப் பதிலளித்துள்ளார்.
தற்போது அரசின் சார்பில் 62 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள், 3 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்தபட்சமாக தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.68 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலையானது வெளிச்சந்தையுடன் ஒப்பீடுகையில் ரூ.28 முதல் ரூ.32 வரை குறைவானதாகும். மேலும், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ரூ.60 முதல் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தக்காளி விலை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில், தக்காளியை பதுக்கும் வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
அடுத்தடுத்து 3 முகூர்த்த நாள் வேற.. வயிற்றில் புளியை கரைக்கும் தக்காளி விலை!
Share your comments