தமிழக உழவர்களுக்கு வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் விவசாய சாகுபடி செயல்முறை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த உழவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச்செல்ல திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்தது முதலே வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டினை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். நெல், கரும்பு கொள்முதலுக்கு ஊக்கத்தொகை என பல்வேறு அறிவிப்புகள் குறிப்பிட்ட நிலையில் பாரம்பரிய காய்கறி விதைகளை அதிகளவில் மீட்டெடுத்த விவசாயிகளுக்கு பரிசுத்தொகை வழங்குவது மற்றும் தமிழக விவசாயிகளுக்கு அயல்நாடுகளில் மேற்கொள்ளப்படும் உயர் இரக தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வினை வழங்கும் வகையில் விவசாயிகளை அயல்நாட்டிற்கு அழைத்துச் சென்று பயிற்சி அளிக்கவும் நடப்பாண்டு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அவற்றின் முழுவிவரம் பின்வருமாறு-
உழவர்களுக்கு அயல்நாட்டில் பயிற்சி:
அயல்நாடுகள் சிலவற்றில் உயர் இரக தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு உற்பத்தித்திறன் அண்ணாந்து பார்க்கும் நிலையில் இருப்பதைக் காண முடிகிறது. அங்கிருக்கும் தொழில்நுட்பங்களை நம் மாநில உழவர்களும் அறிவது, அவர்களுக்குள் ஊக்கத்தை உண்டாக்கும். பிறகு, மனதில் தங்கி, தாக்கத்தை உண்டாக்கும். நாமும் அப்படி உற்பத்தி செய்ய முடியாதா என்கிற ஏக்கத்தை ஏற்படுத்தும். அது சாகுபடியிலிருக்கும் தேக்கத்தை நீக்கி தேடலை உண்டாக்கும். அவர்கள் தங்கள் நிலங்களில் அத்தகைய முயற்சியை மேற்கொள்வார்கள். காண்பது நம்பிக்கையாகவும், செய்வது கற்றலாகவும் மாறும்.
எனவே, 150 முன்னோடி விவசாயிகளை எகிப்து, மலேசியா, இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென ஒன்றிய, மாநில அரசு நிதியிலிருந்து மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய காய்கறிகள் :
தமிழ்நாட்டில் நம் மண்ணுக்கே சொந்தமான சுவை மிகுந்த எண்ணற்ற காய்கறி வகைகள் உள்ளன. இந்த ஆண்டைப் போலவே, வரும் ஆண்டிலும் இத்தகைய பாரம்பரிய காய்கறிகளைப் பரவலாக்கம் செய்யும் வகையில், காய்கறி விதைகள் சேகரிக்கப்பட்டு, மரபணு தோட்டங்கள் அமைக்கப்படும். மாவட்டந்தோறும் விதைத் திருவிழா, மாநில அளவில் கருத்தரங்கம் ஆகியவை நடத்தப்படும். பாரம்பரிய காய்கறி விதைகளை அதிகளவில் மீட்டெடுத்த விவசாயிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்.
இவ்வாறாக மீட்டெடுத்த விதைகள் அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டு விதைப் பொட்டலங்களாக ஆடி, தை பட்டங்களில் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் விநியோகம் செய்யப்படும். வரும் ஆண்டு அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் 1.50 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
கல்வித்துறையுடன் கைக்கோர்க்கும் வேளாண் துறை- பள்ளி மாணவர்களுக்காக புதுத்திட்டம்
இனி ரீசார்ஜ் பண்ண வேண்டாம் போலயே.. 7 மாநகராட்சிகள் இலவச WiFi- பட்ஜெட்டில் அறிவிப்பு
Share your comments