மத்திய புதுப்பிக்கத்தக்க மின்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியளவில் தமிழ்நாடு முதல் இடத்திலும், சூரியசக்தி மின் உற்பத்தியில் 4-வது இடத்திலும் உள்ளதாக தெரிவித்துள்ளது.
கோடைக்காலம் இன்னும் சில மாதங்களில் தொடங்கும் நிலையில், இந்தியா முழுவதும் தற்போதை வழக்கத்திற்கு மாறாக அதிகளவிலான வெப்பம் நிலவுகிறது. இதனால், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மின் தேவையும் அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாநிலமும் தங்களது மின் தேவையினை பூர்த்தி செய்ய காற்றாலை, சூரியசக்தி போன்றவற்றிலிருந்து மின் உற்பத்தியை அதிகரிக்குமாறு ஒன்றிய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, மத்திய புதுப்பிக்கத்தக்க மின்துறை இந்தாண்டு ஜன.,31 ஆம் தேதி நிலவரப்படி நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சூரியசக்தி, காற்றாலை மின் நிலையங்களின் உற்பத்தித் திறன் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலின் அடிப்படையில், காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் 9,964 மெகாவாட் மின் உற்பத்தியுடன் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தை தொடர்ந்து குஜராத் 5,269 மெகாவாட் உற்பத்தியுடன் 2-வது இடத்திலும் , கர்நாடகம் 5,012 மெகாவட் உற்பத்தியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது. காற்றாலை போல், சூரிய மின்சக்தியில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி தமிழகத்தில் 6,123 மெகாவாட் நிலத்திலும், கட்டடங்களின் மேல் 373.73 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் (பிப்.,25) ஆம் தேதி இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு சூரிய ஒளி மின் உற்பத்தி 4,829 மெகாவாட்டை எட்டியது. இதற்கு முந்தைய அதிகப்பட்ச சூரிய ஒளி மின் உற்பத்தியானது 4,783 மெகாவாட் (பிப்.,13) ஆகும்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை சார்ந்த அதிகாரி ஒருவர் மின் தேவை குறித்து தகவல் தெரிவிக்கையில் , மாநிலத்தின் உட்சபட்ச மின் தேவை தற்போது 16,700 மெகாவாட்டை எட்டியுள்ளது. சராசரியாக காலை மற்றும் மாலை வேளைகளில் அதிகப்பட்ச மின் தேவையாக சுமார் 16,300 மெகாவாட் உள்ளது. மார்ச் மாதத்தில் மின் தேவை 17,000 மெகாவாட்டிற்கு மேல் உயரும் எனவும், கோடைக்காலமான ஏப்ரல் மற்றும் மே மாதத்தில், உச்ச தேவை 18,500 மெகாவாட்டை எட்டும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்தாண்டு பிப்.,25 ஆம் தேதி, மாலை நேர மின்தேவை 15,443 மெகாவாட்டாக இருந்த நிலையில், இந்தாண்டு பிப்.,25 ஆம் தேதி 16,202 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. மின்வாரிய தரவுகளின்படி மாநிலத்தின் அதிகப்பட்ச மின்தேவையாக ஏப்ரல் 29 ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு 17,563 மெகாவாட்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது என்றார்.
மேலும் காண்க:
தாட்கோ மூலம் அழகு சாதனத்துறையில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி- யாரெல்லாம் தகுதி?
மார்ச் 2-ல் SDAT விளையாட்டு பயிற்றுநர் பணியிடங்களுக்கான மூன்றாம் கட்ட தேர்வு
Share your comments