தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்துள்ள நிலையில் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக் வீட்டிலும், தலைமைச்செயலகத்தில் உள்ள அமைச்சரது அலுவலகத்திலும் மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சுமார் 17 மணி நேரத்திற்கும் அதிகமாக சோதனை நடத்தினர். இன்று அதிகாலை 2 மணியளவில் விசாரணை நிறைவடைந்த நிலையில், அமைச்சரை கைது செய்து அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்கையில், திடீர் நெஞ்சுவலியால் அமைச்சர் துடித்தார்.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் சென்னையிலுள்ள ஒமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பதாக ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரிய வந்த நிலையில், அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள்.
நீதிமன்ற காவல்:
அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைதில் மனித உரிமை மற்றும் சட்ட விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக திமுகவினர் குற்றம் சாட்டினார். ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைக்கு வருகைத்தந்த சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி அவரது உடல்நலன் குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் நீதிமன்றத்தில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, செந்தில்பாலாஜியை வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
பைபாஸ் சர்ஜரி செய்யப்படுமா?
செந்தில்பாலாஜியை பரிசோதித்த அனைத்து மருத்துவர்கள் குழுவும் பைபாஸ் சர்ஜரி மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ள நிலையில், சர்ஜரி குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சர்ஜரி மேற்கொள்ளும் பட்சத்தில் குறைந்தது 2 மாதங்கள் ஓய்வெடுக்க நேரிடும் என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்?
நீதிமன்ற காவல் உத்தரவினை அடுத்து அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றனர். மின்சாரத்துறை , மதுவிலக்கு என இரு பெரும் துறைகளை கவனித்து வந்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி. இதனிடையே இத்துறைகள் அமைச்சரவையில் புதிய நபருக்கு வழங்கப்படுமா? அல்லது ஏற்கெனவே இருக்கும் அமைச்சரவை உறுப்பினர்களில் யாருக்காவது கூடுதல் பொறுப்பாக துறை ஒதுக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
தற்போது வரை செந்தில்பாலாஜியின் கைது நடவடிக்கைக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அமைச்சர் கைது தொடர்பான சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் காண்க:
இரத்தக்குழாயில் 3 அடைப்பு- அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நலன் என்ன?
Share your comments