நிவர் மற்றும் புரெவி புயல்களைத் தொடர்ந்து பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட தமிழக பகுதிகளை மத்திய குழுவினர் 2வது முறையாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நாகை மாவட்ட விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மழையால் தமிழகம் பாதிப்பு
நிவர் மற்றும் புரெவி புயல்களைத் தொடர்ந்து தமிழகத்தில் வரலாறு காணத கனமழை கொட்டித் தீர்த்தது. புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர் மத்திய-மாநில அரசிடம் அறிக்கை சமர்பித்தனர். அதைத்தொடர்ந்து பெய்த மழையால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. பெரும்பாலான இடங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து மீண்டும் முளைக்க தொடங்கின. பருவம் தவறிய இந்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணமும், 100 சதவீத காப்பீட்டு இழப்பீட்டு தொகையும் வழங்க வேண்டும் எனவும், மீண்டும் மத்திய குழுவினர் பார்வையிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு சார்பிலும் விவசாயிகள் சார்பிலும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
மத்திய குழு ஆய்வு
இந்த நிலையில் மத்திய மீன்வளத்துறை மேம்பாட்டு ஆணையர் பவுல் பாண்டியன் தலைமையில், நெடுஞ்சாலை அமைச்சக மண்டல மேலாளர் மேலாளர் ரணஞ்சேசிங், மத்திய மின்சார ஆணைய உதவி ஆணையர் ஷீபம்கார்க் ஆகியோர் அடங்கிய மத்தியக் குழுவினர், பருவம் தவறி பெய்த மழையால் நாகை மாவட்டத்தில் சேதம் அடைந்த பயிர்களை ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து பயிர் பாதிப்பு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.
அப்போது, இயற்கை இடர்பாடு காலங்களில் மத்தியக்குழு, மாநிலக்குழு என குழுக்கள் வந்து பார்வையிடுகிறது. ஆனால் நிவாரணம் விவசாயிகளுக்கு கிடைப்பது இல்லை விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். பயிர் பாதிப்புகளை பொது பாதிப்பாக கருதி இன்சூரன்ஸ் தொகையை அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதேபோல், நாகை வேதாரண்யம் தாலுகா விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.25,000 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ராமநாதரபுரத்தில் மத்திய குழு ஆய்வு
நாகை மாவட்டத்தை தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் சிறப்புகுழுவினர் களஆய்வு மேற்கொண்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 2021 ஜனவரியில் 248.74 மி.மீ., மழைபெய்தது.இதனால் ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், தேவிப்பட்டினம், , சிக்கல், முதுகுளத்துார், பரமக்குடி மற்றும் திருவாடானை, நயினார்கோயில் பகுதியில் கண்மாய் உடைப்பால்வயல்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டது.
வருவாய்துறை அலுவலர்கள் கணக்கெடுப்பில் நெல் -79,210 சிறுதானியங்கள்- 4059, பயிறுவகை -3030, எண்ணெய் வித்துக்கள் 1297 என மொத்தம் 87,596 எக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளது தெரியவந்தது. மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேற்று மத்திய ஆய்வுக்குழுவினர் ராமநாதபுரம் அருகே குயவன்குடி சமையன்வலசை, கழுவூரணி, ஆலங்குளம், முதுகுளத்துார் பகுதிகளில் நெற்பயிர்களை பார்வையிட்டனர்.
100% இழப்பீடு வழங்க கோரிக்கை
ஆர்.எஸ்.மங்கலம் கருங்குடி, திருவாடானை கற்காத்தக்குடி ஆகிய இடங்களில் மிளகாய், நெற்பயிர்களை ஆய்வு செய்து சேதம் குறித்து விவசாயிகள், வேளாண் அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். அப்போது அவர்களிடம் பேசிய விவசாயிகள், நெற்பயிர்கள் முழுமையாக சேதமடைந்து, நெல்மணிகள் முளைத்துவிட்டன. எங்களுக்கு நுாறுசதவீத இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மேலும் படிக்க
காய்கறி தோட்டங்கள் அமைப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு!
நகைகளை வைத்து விவசாயிகள் பெற்ற பயிர்க் கடனும் தள்ளுபடி! அமைச்சர் செல்லூர் ராஜூ
விவசாயிகளுக்கு இனிப்பான செய்தி! இன்று முதல் பயன்பாட்டிற்கு வரும் நெல் கொள்முதல் நிலையங்கள்!
Share your comments