2050 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்கள் பருவநிலையால் ஏற்படும் பேராபத்துகளை எதிர்கொள்ளும் என சர்வதேச ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
தி கிராஸ் டிபென்டன்சி இனிஷியேட்டிவ் என்கிற அமைப்பு 2006 ஆம் ஆண்டில் இருந்து காலநிலையால் உலக நாடுகளில் ஏற்படும் ஆபத்துகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது ” கிராஸ் டொமஸ்டிக் கிளைமேட் ரிஸ்க்” என்கிற தலைப்பில் நீண்ட கால முதலீட்டிற்கு உகந்த இடங்களை தேர்வு செய்யும் வகையில் சர்வதேச பருவநிலையில் ஆபத்தை எதிர் நோக்கி உள்ள மாநிலங்கள்/மாகாணங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஆய்வறிக்கையானது மழை, வெள்ளம், காட்டுத் தீ, கடல் மட்டம் உயர்வு உள்ளிட்ட தீவிர வானிலை , காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏறத்தாழ 2600-க்கும் மேற்பட்ட பிராந்தியங்களை கொண்ட இந்த பட்டியலில் இந்திய மாநிலங்களும் இடம் பெற்றுள்ளன.
ஆபத்தை எதிர்நோக்கி உள்ள உலகின் முதல் 100 இடங்களில் 14 இந்திய மாநிலங்கள் உள்ளன. இவை, அனைத்தும் வெள்ளத்தை முக்கிய ஆபத்தாக கொண்டுள்ளன - பீகார், உத்தரபிரதேசம், அசாம், ராஜஸ்தான், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், கேரளா, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், ஹரியானா, கர்நாடகா மற்றும் ஆந்திரா.
2050 ஆம் ஆண்டில் மிகவும் ஆபத்திலுள்ள முதல் 50 மாநிலங்கள் மற்றும் மாகாணங்களில் பட்டியிலில் 80 சதவீதம் சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ளன. சீனாவின் 2 பெரிய பொருளாதார மையங்களான ஜியாங்சு மற்றும் ஹான்டாங் ஆகியவை பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்துள்ளன. அமெரிக்காவின் புளோரிடா உள்ளிட்ட 18 மாகாணங்களுக்கு கால நிலை ஆபத்தை எதிர்கொண்டுள்ளன.
காலநிலை ஆபத்தில் அதிக எண்ணிக்கையிலான மாநிலங்களைக் கொண்ட சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. குறிப்பிட்ட இந்திய மாநிலங்களின் தரவரிசை முறையே பீகார் (22வது இடம்), உத்தரபிரதேசம் (25), அசாம் (28), ராஜஸ்தான் (32), தமிழ்நாடு (36), மகாராஷ்டிரா (38), குஜராத் (48), பஞ்சாப் (50), மற்றும் கேரளா (52) ஆகியவை அடங்கும்.
அறிக்கையானது கட்டமைக்கப்பட்ட சூழலில் மட்டுமே கவனம் செலுத்துவதால், விவசாய உற்பத்தி, பல்லுயிர் பெருக்கம் அல்லது மனித நல்வாழ்வு மற்றும் பிற பாதிப்புகள் ஆகியவற்றினால் ஏற்படும் காலநிலை அபாயங்கள் குறித்த தகவல்கள் இவற்றில் இல்லை.
முதல் 50 இடங்களிலுள்ள மற்ற பிற நாடுகள்- பிரேசில், பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா ஆகியவை அடங்கும். ஐரோப்பாவில், பொருளாதார மையமாக திகழும் லண்டன், மிலன், முனிச் மற்றும் வெனிஸ் நகரங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:
இனி அவ்வளவுதானா..Ola, Uber, Rapido நிறுவனங்களுக்கு செக் வைத்த டெல்லி அரசு
நிதி ஆயோக் புதிய சிஇஓ பி.வி.ஆர்.சுப்ரமணியத்தின் பின்னணி என்ன?
Share your comments