“கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களின் தொழில் மற்றும் வணிக சங்கப் பிரதிநிதிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடி கோரிக்கை மனுக்களை பெற்றார்.
“கள ஆய்வில் முதலமைச்சர்”திட்டத்தின் கீழ், மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக இன்று (5.3.2023) காலை மதுரை மாவட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முதலமைச்சர் அவர்கள் மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களைச் சார்ந்த தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மதுரை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம், இராம்நாடு-சிவகங்கை வைகை பாசன விவசாயிகள் சங்கம், வட்டார விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு, பாரம்பரிய மீனவர் சங்கம், துறைமுக விசைப்படகு சங்கம், வர்த்தக சங்கங்கள், அய்யம்பாளையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், ஒட்டன்சத்திரம் வட்டார விவசாயிகள் சங்கம், பெரியகோட்டை வட்டார விவசாயிகள் சங்கம், சிறுதொழில் நிறுவனங்களின் சங்கங்கள், கோகோ கிரீன் சப்ஸ்ட்ராக்ட்ஸ், முல்லைபெரியாறு வைகை ஆறு நீரினை பயன்படுத்துவோர் மற்றும் விவசாயிகள் சங்கம், தேனி மாவட்ட கோராப்பட்டு உற்பத்தியாளர்கள் சங்கம், தேனி மாவட்ட சுருளிப்பட்டி திராட்சை விவசாயிகள் சங்கம் போன்ற சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்தக் கலந்துரையாடலின் போது, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் நிர்வாகிகள், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலராக வளர்ச்சியடைய பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்கும், தென் தமிழகம் தொழில் வணிகத்தில் ஏற்றம் கண்டு, பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் காண சிறப்புக் கவனம் செலுத்தி வருவதற்காகவும் தங்களது பாராட்டுதல்களையும் நன்றியினையும் முதல்வருக்கு தெரிவித்துக் கொண்டனர்.
மேலும், மதுரையில் புதிய சக்கிமங்கலம் சிட்கோ தொழில் பூங்கா அமைத்திடவும், மதுரை விமான நிலையத்திற்கான ஓடதள விரிவாக்கப் பணிகளை விரைந்து முடித்திடவும், மதுரையில் மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைத்திடவும், மதுரையில் பஸ்போர்ட் அமைத்திடவும், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் நிர்வாகிகள் முதலமைச்சரை கேட்டுக் கொண்டனர்.
திண்டுக்கல் வர்த்தகர்கள் சங்கத்தின் சார்பில் திண்டுக்கல்லில் உள்ள சிறுமலை பகுதியை மேம்படுத்தி சுற்றுலா மையமாக மாற்றிட வேண்டும் என்றும், பழனி கொடைக்கானல் ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும், பின்தங்கிய பகுதிகளான எரியோடு, குஜிலியம்பாறை பகுதிகளில் தொழிற்பேட்டை அமைத்து, ஒன்றிய அரசின் இரயில்வே மற்றும் இராணுவத் துறைகளுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உலக பிரசித்தி பெற்ற திண்டுக்கல் பூட்டு மற்றும் இரும்புபெட்டி தொழில்களை சந்தைப்படுத்த அரசு சிறப்பு கவனம் செலுத்திட வேண்டும் என்றும், திண்டுக்கல் மாநகரில் பெரிய அளவில் ஒருங்கிணைந்த காய்கறி, பூ மார்க்கெட் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
மதுரை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் சார்பில், மதுரையில் உருவாக்கப்படும் மாஸ்டர் பிளான் திட்டத்தில் சிறு, குறுந்தொழில்களுக்கு 15 சதவிகித நிலத்தை தொழிற்சாலை நிலமாக அறிவிக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மூலம் சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகித மானியத்தை குறைத்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
விவசாய சங்கங்களின் சார்பில் ஒட்டன்சத்திரம் பகுதியில் தோட்டக்கலை கல்லூரி அமைத்திடவும், காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்திடவும், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சுமார் 1500 யூனியன் கண்மாய்களை தூர்வாரி பாசன வசதி பெற நடவடிக்கை எடுத்திடவும், இராமநாதபுரம் மாவட்டத்தில் நவீன அரசை அரிசி ஆலை அமைத்திடவும், திண்டுக்கல் மாவட்டத்தில் தென்னை சார்ந்த ஒருங்கிணைந்த மதிப்புக்கூட்டு மையம் அமைத்திட வேண்டும் என்றும், திராட்சை விவசாயிகள் பந்தல் அமைத்திட மானியம் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மானிய விலையில் உரங்கள் வழங்கிட வேண்டும் எனவும், முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
பாரம்பரிய இந்திய மீனவர் நலச்சங்கத்தின் சார்பில் தங்கச்சிமடம் வடக்கு கடற்கரையில் தூண்டில் வலையுடன் கூடிய துறைமுகம் அமைத்திடவும், பாம்பன் பகுதியில் உள்ள குந்துகால் மீன்பிடி இறங்குதளத்தை ஆண்டு முழுவதும் பயன்படுத்திட அலை தடுப்பு சுவர் அமைத்திடவும், மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசல் அளவினை உயர்த்தி வழங்கிடவும், இராமேஸ்வரத்தில் மீன்பிடி படகுகள் நிறுத்தி வைக்க புதிய மீன்பிடி துறைமுகம் (Jetty) அமைத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
பட்டு பருத்தி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் இலவம்பஞ்சிற்கான ஜி.எஸ்.டி. வரியை குறைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும், தேனி மாவட்டத்தில் மாங்காய் கூழ் செய்யும் தொழிற்சாலை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
பல்வேறு சங்கங்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த தமிழ்நாடு முதலமைச்சர், அவற்றை பரிசீலித்து உரியவற்றை நிறைவேற்றி தருவதாக அவர்களிடம் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலின் போது, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் எஸ். அனீஷ் சேகர், இ.ஆ.ப., இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச. விசாகன், இ.ஆ.ப., சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப.மதுசூதன் ரெட்டி, இ.ஆ.ப., தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி. ஷஜீவனா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
மேலும் காண்க:
ஜூலைக்குள் மீண்டும் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மின் உற்பத்தி- உதயநிதி வாக்குறுதி
விசைத்தறிக்கு 1000 யூனிட்.. கைத்தறிக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்- அரசாணை குறித்து அமைச்சர் விளக்கம்
Share your comments