தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பொங்கல் பரிசுத்தொகுப்பினை பெறுவதற்கான டோக்கன் இன்று (07.01.2024) முதல் வீடு வீடாக விநியோகம் செய்யும் பணி தொடங்கியது. டோக்கன் வழங்கியதை அடுத்து வருகிற 10 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைத்துத் தரப்பு மக்களும் சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில் 1 கிலோ பச்சரிசி. 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த ஜன.2 ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
அரசின் அறிவிப்பினைத் தொடர்ந்து பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கான முறையான வழிகாட்டு முறைகள் வெளியிடப்பட்டு, நிதி ஒதுக்கீடும் தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
பச்சரிசியினை வெளிச்சந்தை விலையான கிலோ ஒன்றுக்கு ரூ.35.20 வீதம் கொள்முதல் செய்யவும், சர்க்கரையினை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள அக்டோபர் 2023 மாத விலையான கிலோ ஒன்றுக்கு ரூ.40.614 என்ற வீதத்தில் கொள்முதல் செய்யவும், முழுக் கரும்பினை கொள்முதல் செய்வதற்கு சென்ற ஆண்டைப்போல் முழுக் கரும்பு ஒன்றுக்கு தோராயமாக ரூ.33/- வீதம் (போக்குவரத்து செலவினம் மற்றும் வெட்டுக் கூலி உட்பட) கொள்முதல் செய்திடவும் அரசாணை வெளியிடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜன.5 ஆம் தேதியன்று பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என அறிவித்தார்.
மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து வழங்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்து இருந்தார். அதன்படி, தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கிடும் வகையில், இன்று (07.01.2024) முதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.
10.1.2024 முதல் 13.1.2024 வரை பொங்கல் பரிசுத்தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். 14.1.2024 அன்று விடுபட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கிடவும். பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக தகுதியான அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கும் வகையில் அரசின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பொங்கல் பரிசினை பெற்றிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் நியாய விலைக் கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதை தவிர்த்திட நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு டோக்கன் வழங்கப்படுகிறது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் அக்குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசினை பெற்றுக் கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Read more:
அரிசி உமிக்கு அதிகரிக்கும் மவுசு- காரணங்களை அடுக்கும் வேளாண் ஆலோசகர்
கனமழை முதல் மிக கனமழை- தமிழகத்துக்கு தொடர் எச்சரிக்கை விடுத்த IMD
Share your comments