அனைத்து நகா்புறக் கூட்டுறவு வங்கிகள் இனி இந்திய ரிசா்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக அவசரச் சட்டத்தை பிறப்பிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன் படி, நாடு முழுவதும் உள்ள 1,482 கூட்டுறவு வங்கிகள், பல மாநிலங்களில் கிளைகளைக் கொண்ட 58 கூட்டுறவு வங்கிகள் என மொத்தம் 1,540 கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது. இதில் சுமாா் 8.6 கோடி வாடிக்கையாளா்கள் உள்ளனா். இவா்களது சேமிப்பு தொகை சுமாா் ரூ.4.85 லட்சம் கோடியாக இந்த வங்கிகளில் உள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்தது போன்ற மோசடிகளை தடுக்கும் வகையில், நாடு முழுதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது என்றார்.
விவசாயிகளுக்கு நன்மையா?
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், மாநில அரசின் பொறுப்பில் இருந்த வங்கி நிர்வாகம் தற்போது மத்திய அரசின் கீழ் சென்றுவிட்டதாக அரசியல் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில் பிரச்சினை ஏற்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.
ஆனால், தற்போதுள்ள முறைப்படி பார்த்தால் கொடுக்கும் கடனுக்கு நபார்டு வங்கி ஒரு குறிப்பிட்ட சதவீதம் வட்டியுடன் மாநிலக் கூட்டுறவு வங்கிக்கு நிதியை கொடுக்கும். அதை, மாநிலக் கூட்டுறவு வங்கி கூடுதல் வட்டி வைத்து மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளுக்குக் கடன் கொடுக்கும். பின்னர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் அதிலிருந்து கூடுதல் வட்டி வைத்து தொடக்கக் கூட்டுறவு வங்கிகளுக்கு கடன் வழங்கும். தொடக்க கூட்டுறவு வங்கிகள் அதிலிருந்து கூடுதல் வட்டி வைத்து வேளாண் விவசாயிகளுக்கு கடன் வழங்கும்.
ஆனால், ரிசர்வ் வங்கியின் (RBI) நேரடிக் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் கொண்டு வரப்பட்டால் நபார்டு வங்கி (NABARD BANK) எவ்வளவு வட்டியில் கடன் தருகிறதோ அதே வட்டிக்கு விவசாயிகள் கடன் பெறமுடியும் என வங்கி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், விவசாயிகளுக்குக் குறைந்த வட்டி விகிதத்தில் அதிகளவு கடன் தொகை வழங்க முடியும் என்றும், மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் விவசாயிகளுக்கு நன்மையே அதிகம் இருப்பதாக வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விண்வெளி துறையில் தனியார்மயம்
மேலும், விண்வெளி ஆராய்ச்சி துறையில் தனியாருக்கும் வாய்ப்பு அளிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், நம் விண்வெளி கட்டமைப்பு வசதிகளை, தனியார் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். கோள்கள் குறித்த ஆய்வுகளுக்கும் அனுமதிக்கப்படும். இதற்காக, இந்திய தேசிய விண்வெளி மேம்பாட்டு மற்றும் அங்கீகார மையம் துவக்கப்பட்டு உள்ளது. 3 சதவீத வட்டிஇதன் மூலம், 'இஸ்ரோ' (ISRO) எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், அதிக ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி திட்டங்களில், புதிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
முத்ரா யோஜனா - சிசுக் கடன்
இதேபோன்று, பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் (PMMY) கீழ் தகுதி வாய்ந்த கடனாளர்கள் பெறும் அனைத்து சிசுக்கடன் தொகைக்கும் 12 மாதங்களுக்கு 2 சதவீத வட்டி மானியம் அளிக்கும் திட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறு தொழிலில் ஈடுபடுவா்களுக்கு கடன் திட்டத்தை கடந்த மே 15ஆம் தேதி அறிவித்தாா். இந்த முத்ரா யோஜனா திட்டத்தில் ரூ. 50,000 வரை கடன் பெறும் போது ஏற்கனவே வாங்கிய கடனை முறையாக திருப்பிச்செலுத்தியிருந்தால் மீண்டும் கடன் வாங்க அதற்கான வட்டியில் 2 சதவீதம் மானியமாக அளிக்கப்படும் என்று அறிவித்தாா். இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
மேலும் படிக்க..
PM-KMY: விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 36,000 கிடைக்கும்...இந்த திட்டம் தெரியுமா உங்களுக்கு!
அட...! அகத்தி கீரையில் இவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கிறதா?
அரசு மானியத்தில் சூரிய கூடார உலர்த்தி - விவசாயிகளுக்கு அழைப்பு!
PM-Kisan; திட்டத்தில் நீங்கள் இணைந்துவிட்டீர்களா? இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்!!
Share your comments