கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடுவதில் அரசு இயன்ற அனைத்தையும் செய்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 7 தவணைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று 8-வது தவனையாக 9.5 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் செலுத்தப்பட்டது.
இதைதொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, பெருந்தொற்று காலத்திலும், உணவு தானியங்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் உற்பத்தியில் சாதனை படைத்துள்ள விவசாயிகளின் முயற்சிகளை பாராட்டினார். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதில் அரசும் புதிய சாதனைகளை நிகழ்த்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கோதுமை கொள்முதலில் புதிய சாதனை
குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல் கொள்முதலில் புதிய சாதனை படைக்கப்பட்டது. தற்போது, கோதுமை கொள்முதலிலும் புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, இதுவரை, குறைந்தபட்ச ஆதரவு விலையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் 10 சதவீதம் அதிக அளவு கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதுவரை, கோதுமை கொள்முதலுக்கு ரூ.58,000 கோடி விவசாயிகளின் கணக்கில் நேரடியாகச் சென்றடைந்துள்ளது.
வேளாண்மையில் புதிய தீர்வுகளையும், புதிய வாய்ப்புகளையும் வழங்குவதில் அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதும் அத்தகைய முயற்சிகளில் ஒன்றாகும். இயற்கை வேளாண்மை அதிக ஆதாயத்தை வழங்குகிறது. நாட்டில் தற்போது இளம் விவசாயிகளால் இந்த வேளாண் முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கங்கை நதியின் இரு கரைகளிலும் 5 கி.மீ ஆரச்சுற்றளவில் ,தற்போது இயற்கை வேளாண்மை மேற்கொள்ளப்பட்டு வருவதால், கங்கை நதியும் சுத்தமாகிறது.
கண்ணுக்குத் தெரியாத எதிரி கொரோனா
கொரோனா பெருந்தொற்று காலத்தில், கிசான் கடன் அட்டைகளின் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர், ஜூன் 30-ம் தேதி வாக்கில் தவணைகளை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றார். சமீபத்திய ஆண்டுகளில், 2 கோடிக்கும் அதிகமான கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நூற்றாண்டுக்கு ஒரு முறை பரவும் இந்தப் பெருந்தொற்று உலகத்துக்கு சவால் விடுத்துள்ளதாக கூறிய பிரதமர், நம் முன்பு உள்ள கண்ணுக்குத் தெரியாத எதிரியாக அது உள்ளது என்றார். கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடுவதில் அரசு இயன்ற அனைத்தையும் செய்து வருவதாக கூறிய அவர், நாட்டின் வேதனையைக் குறைப்பதில், அரசின் ஒவ்வொரு துறையும் இரவு பகலாக பாடுபட்டு வருவதாகத் தெரிவித்தார்.
இலவச தடுப்பூசி
மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுடன் இணைந்து, அதிக அளவில் நாட்டு மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதி செய்வதில் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். இது வரை நாடு முழுவதும் சுமார் 18 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருப்பதாகவும், நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் தடுப்பூசிக்காக பதிவு செய்து, தங்களது முறை வரும்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும் எல்லா நேரத்திலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதை மக்கள் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இந்த தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக முக்கிய பாதுகாப்பை வழங்குவதாக குறிப்பிட்ட அவர், தீவிர நோய் பாதிப்பு அபாயத்தை இது குறைக்கும் என்றார்.
கள்ளச்சந்தைக்கு எதிராக நடவடிக்கை தேவை
இந்தக் கடினமான நெருக்கடி காலத்தில், ஆக்சிஜன் விநியோகத்தை உறுதி செய்வதில் ஆயுதப் படையினர் முழு ஆற்றலுடன் பணியாற்றி வருவதாக பிரதமர் கூறினார். ரயில்வே ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கி வருகிறது. நாட்டின் மருந்து துறை அதிக அளவில் மருந்துகளை உற்பத்தி செய்து விநியோகித்து வருகிறது. மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைப் பதுக்கும் கள்ளச்சந்தைக்கு எதிராக மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இந்தியா நெருக்கடியான காலங்களில் நம்பிக்கை இழக்கும் நாடு அல்ல என்று குறிப்பிட்ட பிரதமர், இந்தச் சவாலை ஆற்றலுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் சமாளிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஊரகப் பகுதிகளிலும் கொரோனா பரவி வருவது பற்றி எச்சரித்த அவர், கிராமப் பஞ்சாயத்துக்கள் தங்கள் பகுதிகளில் சுகாதாரத்தைப் பேணி, முறையான விழிப்புணர்வை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
Share your comments