The next trouble for the government in opening schools!
மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயப்படுத்தப்படுவதாக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு குறித்து, தமிழ்நாடு அரசு முதன்மை செயலர், பள்ளிக்கல்வித் துறை செயலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக திருநெல்வேலியை சேர்ந்த அப்துல்வஹாதீன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், "தமிழக அரசு 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்கி உள்ளது. அதே சமயத்தில் ஆன்லைன் வகுப்புகளும் நடந்து வருகின்றன.
18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் உள்ள நிலையில் கொரோனா நோய் தொற்றின் 3-வது அலை அதிக அளவில் குழந்தைகளை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைகளே நம் நாட்டின் எதிர்கால தூண்கள்.
சில பள்ளிகளில் மாணவர்களை கண்டிப்பாக நேரடி வகுப்பிற்கு வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளிவந்தன. மேலும் ஒரு சில பள்ளிகளில் கொரோனா தடுப்பு விதி முறைகள் சரியாக பின்பற்றப்படுவதில்லை.
மேலும் பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்பு மூலம் மாணவர்களுக்கு சரியான கற்பித்தல் இல்லை என்பதால் நேரடியாக வகுப்பிற்கு அனுப்ப விருப்பப்படுகின்றனர். பள்ளிகள் திறந்த நிலையில் மாணவர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு செல்கின்றனர். அதனால் சமூக இடைவெளி கடைப்பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் கொரோனா அதிகமாக பரவும் நிலை ஏற்படுகிறது.
எனவே 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என்ற அரசின் ஆணைக்கு இடைக்கால தடை விதிக்கவும், மேலும் 9 முதல் 12- ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியர்கள் பள்ளி செல்ல தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் ஆகியோரின் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் 'மாணவர்கள் கட்டாயம் நேரடி வகுப்பிற்கு வர வேண்டும் என்று பள்ளிகளில் கட்டாயப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து 'கட்டாயமாக மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தும் பள்ளிகளின் விவரங்களை மனுதாரர் கூறினால் அத்தகைய பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிடலாம்' எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு முதன்மை செயலர், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்குமாறும் இது தொடர்பான வழக்கு விசாரணையை செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் படிக்க...
செப்டம்பர் 1 முதல் திறக்கப்படும் பள்ளிகள். 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
Share your comments