The peak price of cotton! Farmers are happy!!
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஏலத்தில் கடந்த வாரத்தை விட 141 குவிண்டால் பருத்தி வரத்து அதிகரித்து 753.07 குவிண்டாலாக ஏலம் நிகழ்ந்துள்ளது. மொத்தம் ரூ.61.80 லட்சம் மதிப்புக்கு ஏல முறையில் விற்பனையாகியுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்பட்டுவரும் கோயம்புத்தூரில் அதிக அளவில் விளைந்த பருத்தியை நூலாகவும், துணியாகவும் மாற்ற ஏராளமான ஸ்பின்னிங் மில்கள் செயல்பட்டு வந்தன. காலப்போக்கில் பல காரணங்களால் மில்கள் நலிவடைந்து மூடப்பட்டு பருத்தி சாகுபடி பரப்பும் குறைந்தது. இதனால் அந்த இடத்தை வளர்ச்சியடைந்து வந்த திருப்பூரின் பின்னலாடைத் துறை ஓரளவு தக்கவைத்துக் கொண்டது.
கடந்த 30 ஆண்டுக்கு முன்பு இப்பகுதிகளில் அதிக அளவில் பருத்தி விளைவிக்கப்பட்டு நூல் தேவையினைப் பூர்த்தி செய்து வந்தது. இதனை விற்பனை செய்யும் முக்கிய மையமாக அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் இருந்தது. பருத்தி ஏலம் நடப்பதில் அவிநாசி எனும் பகுதியில் மிக பிரபலமான ஒன்றாக இன்றளவும் இருந்து வருகின்றது.
இச்சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். இதில் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியிலிருந்தும் விவசாயிகள் பருத்தியை சீசன் துவங்கும் ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் முதல் வாரம் வரை விற்பனைக்கு வருகின்றனர்.
அந்நிலையில் சங்கத்துக்கு 753.07 குவிண்டால் பருத்தி வரத்து வந்தது. இது கடந்த வாரம் வந்த 612.01 குவிண்டால் பருத்தியினைக் காட்டிலும் மிகுதியாகும். இந்த வாரம் 141.06 குவிண்டாலாக அதிகரித்து 2418 மூட்டைகள் வரத்து இருந்தது. இந்த ஏலத்தில் சுமார் 14 வியாபாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில் ஆர்சிஎச் ரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7000 முதல் ரூ.9189 ரூபாய் வரை ஏலத்தில் விலை போனதாகக் கூறப்படுகிறது.
அதே போன்று கொட்டுரக (இரண்டாம் தரம்) பருத்தி ரூ.2000 முதல் ரூ.3500 வரையில் விற்பன்னையானது. 753.07 குவிண்டால் பருத்தி மொத்தம் ரூ.61.80 லட்சத்துக்கு விலை போனது. இதில் கடந்த வாரம் முதல் தர பருத்தி ரூ.7500 முதல் ரூ.9006 வரை விற்பன்னையானது. அது இந்த வாரம் பெரிய மாற்றம் இல்லாமலும், மட்டரக பருத்தி அதிகபட்ச விலை ரூ.500 குறைந்தும் விலை போனது. கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் அதிக பருத்தி வரத்து இருந்ததன் காரணமாக 141 குவிண்டால் அதிக வரத்தானது. மேலும் கடந்த வார மொத்த ஏலத் தொகையான ரூ.49.44 லட்சத்தை காட்டிலும் இந்த வாரம் ரூ.12.36 லட்சம் அதிகரித்து ரூ.61.80 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போயுள்ளது.
பருத்தி விலை உயர்வால் ஒரு கேண்டி பஞ்சு தற்போது விலை குறைந்து 76 ஆயிரம் முதல் 82 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. அதேநேரம், மத்திய அரசு விவசாயிகளுக்கு பருத்திக்கான ஆதார விலையாக முதல் தரத்துக்கு ரூ.8 ஆயிரமும், இரண்டாம் தரத்துக்கு ரூ.4 ஆயிரமும் வழங்க வேண்டும் என பருத்தி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளதால் விவசாயிகள் இருப்பு வைத்துள்ள பருத்தியை விற்பனைக்காக கொண்டு வருவதால் வரத்து அதிகரித்து இருக்கிறது.
மேலும் படிக்க
Rationcard: வங்கி கணக்கு இல்லாத ரேஷன் அட்டைகள்: கூட்டுறவுத்துறை முக்கிய அறிவிப்பு!
Share your comments