தேவாளையில் பூ விற்பனைக்கு என்று பிரசித்திப் பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. அங்கு குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் ஏனைய பிற பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு என கொண்டு வரப்படுகிறது. அதோடு தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் பூக்களைப் போட்டிப் போட்டு வாங்கிச் செல்கின்றனர்.
ஒரு கிலோ ரூ 1500-க்கு விற்ற மல்லிகைப் பூ தற்போது கிலோ ரூ. 3000 எனும் நிலைக்கும், ரூ.700-க்கு விற்ற முல்லைப்பூ, ஜாதிப்பூ தற்போது 1500-க்கும் விற்கப்படுகிறது. இதே போல ஒவ்வொரு பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. குமரி மாவட்டம் மட்டுமல்லாது, கரூர் மாவட்டம், ப. வேலூர் வட்டாரப் பகுதி, திருப்பூர் பகுதி ஆகிய பிற பகுதிகளிலும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இந்த வட்டாரப் பகுதிகளில் விளையும் பூக்களை ஏலச்சந்தைக்குக் கொண்டு வந்து ஏலம் விடுகின்றனர்.
மல்லிப்பூ, பிச்சிப்பூ ஆகியவற்றைத் தொடர்ந்து, முல்லைப் பூ, சம்பங்கி, செவ்வந்தி, கனகாம்பரம், ரோஜா, துளசிக் கட்டு ஆகியனவும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பூக்களின் விலை ஏற்றம் குறித்துப் பூ வியாபாரி கூறுவதாவது, நாளை சித்திரை முதல் நாள் என்பதால் இவ்விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது எனக் கூறுகிறார். அதோடு பூக்களின் வரத்துக் குறைவு காரணமாகவும் பிச்சி, மல்லிகை போன்ற பூக்களின் விலை அதிகரித்துள்ளது எனக் கூறப்படுகிறது.
இத்தகைய விலையேற்றம் பூக்களை விளைவிக்கும் பூ விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூக்களின் வரத்தும் குறைந்துள்ளது. விலையும் அதிகரித்து உள்ளது. விலை அதிகரித்தாலும் மக்கள் பூக்களை வாங்கிச் செல்கின்றனர். இந்த நிலை பூ வியாபாரிகளுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே பூக்களை ஏலம் மூலம் கொள்முதல் விலையில் வாங்கிச் சென்று வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கும் அதிகப் பயனைத் தருவதாக இவ்விலை உயர்வு அமைந்துள்ளது.
மேலும் படிக்க
Share your comments