வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் நேற்று (டிசம்பர் 25) காலை 9.30 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 3 வினாடிகள் நீடித்த இந்த நில அதிர்வால் மக்கள் பீதியடைந்து சாலைகள் மற்றும் தெருக்களில் குவிந்தனர்.
வேலூரில் நிலநடுக்கம் (Earthquake in Vellore)
வேலூர் மாவட்டத்தில், கடந்த நவம்பர் 29 ம் தேதி அதிகாலை 4:17 மணிக்கு திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது. இதனை தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில், நேற்று முன்தினம் (டிச 23) திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்ட டுவீட்டில், வேலூரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் இன்று (டிச 23) பிற்பகல் 3.14 மணிக்கு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி உள்ளது என்று கூறி இருந்தது.
மேலும், இந்த நில அதிர்வு வேலூருக்கு மேற்கு - வடமேற்கில் 50 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இந்த நில அதிர்வானது 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.
மூன்றாவது நிலநடுக்கம் (Third Earthquake)
இந்நிலையில், நேற்று (டிச 25) காலை மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டதாக வேலூர், குடியாத்தத்தை அடுத்த பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூறுகையில், நாங்கள் அனைவரும் ஐந்து நிமிட இடைவெளியில் இரண்டு முறை சுமார் மூன்று வினாடிகள் நீடித்த நில அதிர்வினை உணர்ந்தோம்.
மேலும் நில அதிர்வை உணர்ந்த பலரும் அச்சத்தில் வீட்டைவிட்டு வெளியே வந்தனர் என்று தெரிவித்தனர்.
இவ்வாறு நில அதிர்வு ஏற்பட்டும் தற்போது வரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அரசாங்கத்திடமிருந்து வெளியிடப்படவில்லை.
அச்சமடைந்துள்ள மக்கள் நில அதிர்வுக்கான காரணம் குறித்து புவியியல் வல்லுநர்களை வைத்து ஆராய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு இல்லை: முதல்வர் அறிவிப்பு!
5 நாட்களுக்கு குளிர்ந்த வானிலை: காலநிலை ஆராய்ச்சி மையம் கணிப்பு!
Share your comments