பெருந்தொழில்களைக் காட்டிலும் சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” எனும் திருப்பூர் மண்டல மாநாட்டில் அறிவித்துள்ளார். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
திருப்பூரில் “தோள் கொடுப்போம் தொழில்கலூக்கு” எனும் மண்டல மாநாட்டில் சிறு, குறு தொழில்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம் ((TNCGS) எனும் திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் தொழில்களுக்கு நிதி வசதியினைப் பிணையமின்றி எளிதில் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தின் கீழ், ரூ,40 இலட்சம் வரையுள்ள கடன்களுக்கு 90 விழுக்காடு உத்தரவாதம் வழங்கப்படும். ரூ.40 இலட்சம் முதல் ரூ.2 கோடி வரை உள்ள கடன்களுக்கு 80 விழுக்காடு உத்தரவாதம் வழங்கப்படும். ஒன்றிய அரசின் குறு மற்றும் சிறு தொழில்களுக்கான கடன் உத்தரவாத நிதியத்துடன் (CGTMSE) இணைந்து தமிழ்நாடு அரசு அளிக்க உள்ளது எனக் கூறப்படுகிறது.
இந்த திட்டத்தின் சிறப்பம்சமானது, பொதுவாக வங்கிக் கடன் பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களைத் தீர்த்து அனைத்து நடைமுறைகளும் இணையதளம் வழியாகச் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அமைவதால் கடன் விண்ணப்பப் பரிசீலனை செய்யும் நேரம் குறைக்க வழிவகை செய்யப்படும்.
தாட்கோ வங்கியிலிருந்து கடன் பெறவிருக்கும் தொழில் முனைவோர்களுக்கும் பயனளிக்கும் விதமாக இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் கீழ் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் "தரமதிப்பீடு" (Credit score) நிறுவனங்களின் 'கடந்த கால கடனை திருப்பி செலுத்திய காரணி (CIBIL score)' மட்டுமல்லாமல் இதர நிதிநிலை செயல்பாடுகளையும் கொண்டு இணையதளம் வாயிலாகவே செயல்படுத்தப்பட இருக்கிறது. இத்தரமதிப்பீடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள். வங்கிகள் / நிதி நிறுவனங்களின் மூலம் கடன் பெற பெரும் உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இவ்வாறு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கலூக்கு என அறிவிக்கப்பட்ட மேற்கண்ட அனைத்து நடைமுறைகளையும் இந்தியாவில் செயல்பாட்டுக்குக் கொண்டு வரவுள்ள முதல் மாநிலம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய செயல்பாடுகளுக்கு எனத் தமிழ்நாடு அரசு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததோடு, கடன் உத்தரவாதத்துடன் 1.19 கோடி ரூபாய்க்கான கடன் தொகையினை, திருப்பூர் மண்டலத்தினைச் சார்ந்த 5 பயனாளிகளுக்கு தமிழக முதல்வர் வழங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் 70-க்கும் மேற்பட்ட பிற பயனாளிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 17 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்று இன்றைய தினமே இந்த திட்டத்தின் வாயிலாகப் பயன்பெறுவார்கள் என்பது கூடுதல் தகவல் ஆகும்.
மேலும் படிக்க
Share your comments