தமிழ்நாட்டு அமைச்சரவையில் இன்று புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பதவியேற்றுள்ள நிலையில், 3 முக்கிய அமைச்சர்களின் இலாக்காவும் முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும், விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில் பிடிஆர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதலே பால்வளத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்த ஆவடி நாசர் அதிரடியாக அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக அமைச்சரவையில் தொடர்ந்து 3 சட்ட மன்றத்தேர்தல்களில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்றவரும், திமுகவின் முன்னணி தலைவர் டி.ஆர்.பி.பாலுவின் மகனுமான டி.ஆர்.பி.ராஜா தமிழக அமைச்சராக பதவியேற்றுள்ளார். அவருக்கு தொழில்துறை இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழ்நாடு அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை எவ்வித மாற்றமின்றி 35 ஆக நீடிக்கிறது. அதே நேரத்தில் மூன்று அமைச்சர்களில் இலாக்காவும் மாற்றப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்ட பிடிஆர்:
திமுக அரசு அமைந்தது முதலே தமிழக நிதியமைச்சராக பதவி வகித்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மேற்கொண்டு அதிரடி நடவடிக்கைகளும், அவரது செயல்பாடுகளும் பெருமளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தமிழகத்தின் பொருளாதாரம், ஒன்றிய அரசின் செயல்பாடுகள் குறித்த அவரின் பேட்டிகள் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பரவலாக பகிரப்பட்டும் வந்தது. அண்மையில் சில ஆடியோ சர்ச்சைகள் அவரே சுற்றி எழுந்தன. இதனிடையே இன்று நிதியமைச்சர் பொறுப்பிலிருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை இலாகா மாற்றி ஒதுக்கப்பட்டுள்ளது.
தொழில்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த தங்கம் தென்னரசு புதிய நிதியமைச்சராக பதவியேற்றுள்ளார். ஏற்கெனவே தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ், பால் வளத்துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
தங்கம் தென்னரசு நிர்வகித்து வந்த தமிழ் வளர்ச்சித்துறை, செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சரான வெள்ளகோவில் சாமிநாதனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
புதிய தலைமைச்செயலாளர் யார்?
தலைமைச்செயலாளர் இறையன்பு அடுத்த மாதம் ஓய்வுபெறும் நிலையில் புதிய தலைமைச்செயலாளர் குறித்த அறிவிப்பும் இன்று வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிடிஆர் அறிக்கை:
நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட பழனிவேல் தியாகராஜன் இதுக்குறித்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவை:
” கடந்த இரண்டு ஆண்டுகள் என் வாழ்விலேயே மிகவும் நிறைவான ஆண்டுகளாகும். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மூன்று பட்ஜெட் தாக்கல் செய்துள்ளேன். உலகளவில் இன்று முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான #1 துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்ப இலக்காவை எனக்குத் தற்போது வழங்கியதற்கு நான் நன்றியுள்ளவனாவேன். தொழில்நுட்பமே எதிர்காலத்தை வடிவமைக்கிறது என்பதை நாம் அறிவோம்.
கடந்த இரண்டு ஆண்டுகள் நிதித்துறை பொறுப்பு வழங்கியதற்காகவும், தற்பொழுது எழுச்சிமிக்க புதிய பொறுப்பை வழங்கி மக்களுக்காகப் பணியாற்றும் வாய்ப்பை அளித்துள்ள என் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் ” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவையில் ராஜா இணைந்தமைக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், பிடிஆர் இலாகா மாற்றப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் விமர்சனத்தையும் பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
அடி தூள்.. மின்வாரிய ஊழியர்களுக்கு 6 % ஊதிய உயர்வு- அமைச்சரின் முழு பேட்டி
Share your comments