
Farmers harvesting paddy crops at a field in Delta district of Tamil Nadu (Pic credit: Pexels)
தஞ்சாவூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்கள் விவசாயிகளுக்காக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். வேளாண் அடுக்குத் திட்டத்தில் விவசாயிகள் கட்டாயம் ஏன் பதிவு செய்ய வேண்டும், அதன் மூலம் பிஎம் கிசான் மற்றும் பயிர்க்கடன் பெறுவது எப்படி, விவசாயிகள் தங்களுக்கு இருக்கும் குறைகளை விவசாயிகள் தீர்வு தேடிக்கொள்வது எப்படி? என்பது உள்ளிட்ட விவரங்கள் இந்த அறிவிப்புகளில் இடம்பெற்றுள்ளன.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப்பலன்களைப் பெறுவதற்கு தங்களது நில உடைமை விவரங்கள். பயிர்சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதில் ஏற்படும் காலதாமதத்தினை தவிர்க்கும் வகையிலும் அரசின் திட்டங்கள் விவசாயிகளுக்கு குறித்த நேரத்தில் பயன் பெற ஏதுவாகவும், அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரித்திட தமிழ்நாட்டில் வேளாண் அடுக்குத் திட்டம் (AgriStack) செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 59.102 விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தில் பதிவு செய்து உள்ளனர். மீதமுள்ள விவசாயிகள் தங்களது நில உடைமைகளை இம்மாத இறுதிக்குள் பதிவு செய்திட வேளாண்மைத்துறையால் வலியுறுத்தப்படுகிறது. மேலும், பதிவுகள் விடுபடாமல் செய்திடும் பொருட்டு தற்போது, விவசாயிகளின் பதிவு விவரங்களுடன், ஆதார் எண். கைபேசி எண், நில உடைமை விவரங்களையும் இணைக்கும் பணி ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் நடைபெற்று வருகிறது.
மேலும் விவசாயிகள் பொது சேவை மையம் (CSC) சென்று அங்கும் நில உடைமை விவரங்கள் இணைக்கப்பட்ட பின்னர் அனைத்து விவரங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதார் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படுத்தப்படும்.
2025-26ஆம் நிதி ஆண்டு முதல், பிரதம மந்திரி கவுரவ நிதித் திட்டம் (PMKISAN), பயிர்க் காப்பீடுத் திட்டம் (PMFBY) போன்ற ஒன்றிய மற்றும் மாநில அரசின் திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பயன்பெற தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம். எனவே, விவசாயிகள் தங்களது கிராமங்களில் வேளாண்மை - உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மற்றும் அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாகச் சென்று தங்கள் நில உடைமை விவரங்கள், ஆதார், கைபேசி எண் ஆகிய விவரங்களை அளித்து எவ்வித கட்டணமுமின்றி 31.03.2025-ஆம் தேதிக்குள் இத்திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் முக்கிய அறிவிப்பில், திருப்பத்தூர் மாவட்டத்தில் மார்ச் - 2025 -ம் மாதத்திற்குரிய விவசாயிகள் குறைதீர்வு நாள் முகாம் 21.03.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலை 10.30 மணியளவில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்ட அரங்கில் (GDP HALL) நடைபெறவுள்ளது. இம்முகாம் நாளில் மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் கூட்டரங்கில் (GDP HALL-ல்) விவசாயிகளிடம் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
மேற்காணும் முகாமில் மாவட்ட அளவிலான அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அது சமயம் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று மனுதாரருக்கு உடனடியாக ஒப்புகைச்சீட்டும் வழங்கப்படும். எனவே திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் அனைவரும் மேற்குறிப்பிட்ட நாளில் கலந்து கொண்டு பயனடையுமாறு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
Read more:
Share your comments