நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்எல்சி) சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பான பிரச்னைகளை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று தலைமைச்செயலகத்தில் நடைப்பெற்றது.
தமிழக அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வி.கணேசன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இக்கூட்டத்திற்கு புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண் மொழிதேவன், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், ஆகியோருடன் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காத நிலையிலும் பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
கூட்டத்தின் முடிவில் என்.எல்.சி.யுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தலைமைச் செயலாளர் உறுதியளித்ததாக அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது, "2040-க்குள் பூஜ்ஜிய கார்பன் வெளியேற்றத்தை அடைய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்த நேரத்தில், அதிக நிலத்தை கையகப்படுத்த மாநில அரசு ஏன் என்எல்சிக்கு உதவுகிறது?" என்றார். மேலும், “NLC நிறுவனம் கடலூர் மாவட்டத்திற்கு தேவையில்லை, கடைசியாக 1989-ல் அங்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கொடுத்தார்கள். ஆனால், இப்போது வரை நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலை கொடுக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார். தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யும் மின்சாரமே போதுமானது. NLC தரும் மின்சாரம் தேவையில்லை. நம்முடைய கடமை நல்ல காற்று, நீரை அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டும். பொதுமக்களின் நிலங்களை கையகப்படுத்துவது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம்” எனவும் குறிப்பிட்டார்
என்எல்சிக்கு நிலம் கொடுத்த விவசாயிகளை அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காதது குறித்து அருண்மொழித்தேவன் (அதிமுக) கவலை தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு NLC மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. 1989 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒருவருக்கு கூட நிரந்தர வீடு வழங்கவில்லை.
MBA படித்த பெண்களுக்கு, படிப்புக்கு ஏற்ற வேலையை NLC நிறுவனம் கொடுக்கவில்லை. அவர்களின் ஒரே கொள்கை மக்கள் வாழ்ந்தாலும், வாழவில்லை என்றாலும் தங்களுக்கு நிலம் வேண்டும் என்பது தான். விவசாயிகளை வஞ்சித்து இந்த என்.எல்.சி நிறுவனத்தை கொண்டு வரத்தேவையில்லை என அரசிடம் வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளைப் பயன்படுத்தி நிலம் கையகப்படுத்தும் முயற்சியைக் கைவிடுமாறு தலைமைச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்ட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.
NLC விவகாரத்தில் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என தமிழக தலைமைச்செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். விவசாயிகளுடன் பேசி முடிவு காணும் வரை நிலம் எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது எனவும் உறுதி அளித்துள்ளார்.
pic courtesy:TNDIPR
மேலும் காண்க:
Share your comments