டி.என்.பி.எஸ்.சி (TNPSC) வெளியிட்ட ஆண்டறிக்கையின்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியாகி உள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் மாணவர்கள் கடுமையான பயிற்சி எடுத்து வருகின்றனர். இந்நிலையில், வினாத்தாள் தொடர்பாக தேர்வர்களுக்கு குழப்பம் இருந்து வருகிறது. ஏனென்றால், டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் ஆங்கில மொழித்தாள் நீக்கப்பட்டு, தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இதனால், பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடைபெறுமா? அல்லது புதியதாக பாடத்திட்டம் வெளியிடப்படுமா? என்று தொடர்ந்து கேள்வி எழுந்து வருகிறது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள டி.என்.பி.எஸ்.சி, தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இதுகுறித்து கவலைப்பட வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளது. தேர்வர்களிடையே எழுந்துள்ள சந்தேகங்களைப் போக்கும் வகையில் விரைவில் குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் புதியதாக வெளியிடப்படும் எனக் கூறியுள்ளது. அந்த பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டால் போதும் எனத் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அரசுப் பணிக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வை எழுத தமிழகம் முழுவதும் லட்சகணக்கானோர் காத்திருக்கின்றனர். இந்த தேர்வுகளுக்காக மாணவர்கள் தங்களை, 12ஆம் வகுப்பு முதல் தயார் செய்துக்கொள்கின்றனர். இந்நிலையில் இம்முறை, கொரோனா காரணமாக தனியார் வேலை வாய்ப்புகளை இழந்தவர்களும், மும்முரமாக தேர்வுக்கு படித்து வருகின்றனர். புதியதாக ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக அரசு, தமிழுக்கும், தமிழக மாணவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வினாத்தாளையும், பாடத்திட்டத்தையும் மாற்றியமைத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. ஆனால், அதுதொடர்பான சந்தேகங்கள் மாணவர்களிடம் இருந்தநிலையில், டி.என்.பி.எஸ்.சி புதிய விளக்கத்தை வழங்கியுள்ளது. அடுத்தாண்டு வெளியாக இருக்கும் குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் ஏறத்தாழ 5 ஆயிரத்துக்கும் மேலாக இருக்கும் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்திருக்கிறது.
மேலும் படிக்க:
Share your comments