வெவ்வேறு வேளாண் காலநிலை சூழ்நிலைகளின் கீழ் சாகுபடி செய்ய 14 வகையான பூண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று ஒன்றிய அரசின் சார்பில் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
ராபி பருவத்தில் சாகுபடி செய்யும் பூண்டினை காரீஃப் பயிர் சுழற்சிக்கு ஏற்றதாக மாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பல்வேறு பருவங்களில் சாகுபடி செய்வதற்கு ஏற்ற வகைகளை அடையாளம் காண பூண்டின் மரபணு முன்னேற்றம் குறித்து திட்டமிட்ட ஆராய்ச்சி நடத்தப்படும் என்றார்.
இந்தியாவில் வேளாண் காலநிலை நிலைமைகளை புனேவிலுள்ள ஐசிஏஆர் - வெங்காயம் மற்றும் பூண்டு ஆராய்ச்சி இயக்குநரகம், மற்றும் நாசிக்கில் அமைந்துள்ள தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளை ஆகியவற்றால் மேற்கொள்ளப்படுகிறது.
புனேவில் உள்ள வெங்காயம் மற்றும் பூண்டு தொடர்பான ஐசிஏஆர் - அகில இந்திய நெட்வொர்க் ஆராய்ச்சி திட்டம் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் இருப்பிடம் சார்ந்த அடாப்டிவ் சோதனைகள் ( மாற்றுவழி) மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என்றார்.
பொருத்தமான காலநிலை:
மஹாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் விவசாய காலநிலை காரீஃப் பருவத்தில் பூண்டு உற்பத்திக்கு ஏற்றது என கண்டறியப்பட்டுள்ளது. சமவெளியில் 11 வகைகள், மலைப்பகுதிகளில் பயிரிட 3 வகைகள் என மொத்தம் 14 வகையான பூண்டுகள் வெவ்வேறு வேளாண் காலநிலை நிலைமைகளின் கீழ் சாகுபடி செய்ய அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த பூண்டு வகைகளில், ‘பீமா பர்ப்பிள்’ மற்றும் ‘ஜி282’ ஆகியவை மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு (ஊட்டி) ஆகிய மாநிலங்களில் காரீஃப் காலத்தில் சாகுபடி செய்ய அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேசமயம் ‘கடக் லோக்கல் ”(Gadag local) என பெயரிடப்பட்டுள்ள இனம் கர்நாடகாவின் நிலப்பரப்பிற்கு மட்டுமே உகந்தது. காரீஃப் பருவத்தில் ‘ஜி282’ மற்றும் ‘பீமா பர்பில்’வகையான பூண்டுகள் ஹெக்டேருக்கு 40-50 குவிண்டால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
'ஜி389' எனப்படும் பூண்டு வகை மஹாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய பகுதியில் ராபி பருவத்தில் (ஹெக்டருக்கு 60-70 குவிண்டால்) காரீஃப் பருவத்தில் (ஹெக்டருக்கு 40-60 குவிண்டால்) உற்பத்தி செய்ய இயலும் என கண்டறியப்பட்டுள்ளது. மற்றொரு கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர், விவசாயத்திற்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை (Digital Public Infrastructure-DPI) திறந்த பொதுநல தளமாக உருவாக்க ஒன்றிய அரசு முன்மொழிந்துள்ளது என்றார்.
விவசாயிகள், பயிர் விதைக்கப்பட்ட பதிவேடு மற்றும் கிராம வரைபடங்கள் மற்றும் பயிர் விதைக்கப்பட்ட பதிவேட்டின் புவி-குறிப்பு தொடர்பான தகவல்கள், ஒருங்கிணைந்த விவசாயிகள் சேவை இடைமுகம், வேளாண் தரவு பரிமாற்றம் மற்றும் ஒப்புதல் மேலாளர் ஆகியவை டிபிஐயின் வளர்ச்சியின் ஒரு பகுதியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காண்க:
தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை- சாலையில் பாலைக்கொட்டி போராட்டம்! சிக்கலில் ஆவின் நிறுவனம்
Share your comments