1.தக்காளி கிலோ ரூ.1 க்கு கொள்முதல்
இந்த ஆண்டு உற்பத்தி அதிகரித்ததால் தக்காளி வரத்தும் மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் திருச்சி காந்தி மார்க்கெட்டில் நேற்று 25 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.100 முதல் ரூ.200 வரை தான் விலை போனது. அதே நேரத்தில் ஒரு கிலோ தக்காளி சில்லரை விலையில் ரூ.8 முதல் ரூ.10 வரை விற்கப்பட்டது.
இதுகுறித்து வியாபாரிகள் தெரிவித்ததாவது , ஒரு கிலோ ரூ.1 முதல் ரூ.2 வரைதான் கொள்முதல் செய்ய முடிகிறது. வண்டி வாடகை, ஏற்று கூலி, இறக்கு கூலி எல்லாம் சேர்த்து ரூ.8-க்கு விற்கிறார்கள். ஆனாலும் வாங்குவதற்கு ஆள் இல்லாததால் அவை தேக்கம் அடைந்துள்ளன. தற்போது ஆங்காங்கே மழை பெய்வதால் தக்காளி வரத்து விரைவில் குறைந்து விலை உயரும், என்று தெரிவித்துள்ளனர்.
2.ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.73லட்சத்துக்கு மேல் விவசாய விளைபொருட்கள் ஏலம்
கொடுமுடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் 15 ஆயிரத்து 820 தேங்காய்களை கொண்டு வந்திருந்தனர். இது மொத்தம் 1 லட்சத்து 26 ஆயிரத்து 742 ரூபாய்க்கு விற்பனையானது.
466 மூட்டைகளில் கொப்பரை தேங்காய்கள் கொண்டுவரப்பட்டது.
கொப்பரை தேங்காய் மொத்தம் 15 லட்சத்து 44 ஆயிரத்து 780-க்கு விற்பனையானது.
513 மூட்டைகளில் எள் கொண்டு வரப்பட்டது.
மொத்தம் 56 லட்சத்து 91 ஆயிரத்து 118 ரூபாய்க்கு எள் ஏலம்போனது.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் மொத்தம் ரூ.73 லட்சத்து 62 ஆயிரத்து 622-க்கு ஏலம்போனது.
3.பலாப்பழம் வரத்து அதிகம் பழனியில் விற்பனை அமோகம்
கேரளாவில் தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கி உள்ளது. இதனால் கேரளாவில் இருந்து பழனிக்கு பலாப்பழம் வரத்து அதிகரித்துள்ளது.
கேரளாவில் இருந்து வியாபாரிகள் மொத்தமாக பலாப்பழங்களை வாங்கி வந்து, பழனியில் சாலையோர பகுதியில் விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர். பழனி அடிவார சாலை, திண்டுக்கல் சாலை ஆகிய இடங்களில் பலாப்பழம் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. ஒரு கிலோ ரூ.20 என விற்கப்படுகிறது. பழனிக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் என பலரும் ஆர்வமுடன் பலாப்பழங்களை வாங்கி செல்கின்றனர்.
4.ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள்
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளின் வாயிலாக அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் கூடிய விரைவில் ஆவின் பொருட்களும் விற்பனை செய்ய இருப்பதாக அரசு திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
5.கோடைகாலத்தில் கொட்டும் மழை!
இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 கி.மீ. முதல் 40 கி.மீ. வரையிலான வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
6.மீண்டும் 45 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு மீண்டும் 45 ஆயிரத்தை தாண்டியது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.45 ஆயிரத்து 040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒருகிராம் தங்கத்தின் விலை ரூ.10 அதிகரித்து ரூ.5 ஆயிரத்து 630க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க
Share your comments