
ஆலஞ்சேரியில், வனத்துறைக்கு சொந்தமான காட்டுப் பகுதியில், எம்-சாண்ட் தொழிற்சாலை கழிவு நீர் கலப்பதால், மண் வளம் பாதித்து, பல வகையான மரங்கள் அழிந்து வருவதாக அப்பகுதியினர் குற்றஞ்சாட்டி உள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியம், நெல்வாய் கூட்டுச்சாலையில் இருந்து, குண்ணவாக்கம் செல்லும் சாலையில், ஆலஞ்சேரி கிராமம் உள்ளதுஇக்கிராமத்தின் சாலையோரத்தில், வனத்துறைக்கு சொந்தமான காடு உள்ளது. இக்காட்டில், வனத்துறை சார்பில், பல வகையான மரங்கள் வைத்து, பராமரித்து வருகின்றனர்.
எம்-சாண்ட் (M-Sand)
காட்டுப் பகுதிக்கு அருகாமையில், விவசாய நிலங்களை விலைக்கு பெற்று, தனியார் நிறுவனம் சார்பில், எம்-சாண்ட் தொழிற்சாலை இயங்குகிறது. இத்தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் எம்-சாண்ட் கழிவுகள், மழை நேரங்களில், மழை நீரோடு சேர்ந்து, வனத்துறை காட்டில் கலக்கிறது. இதனால், வனத்துறை சார்பில் பராமரிக்கப்படும் தைல மரம் உள்ளிட்ட பல வகையான மரங்கள் பாதிப்பிற்குள்ளாகி மரங்கள் காய்ந்து வருவதாக கூறப்படுகிறது.
ஆலஞ்சேரி கிராம வாசிகள் கூறியதாவது: தனியார் தொழிற்சாலையில், எம்-சாண்ட் கழிவுகளை முறையாக தேக்கி வைப்பதில்லை. இதனால், அக்கழிவுகள், காடு மற்றும் விவசாய நிலங்களில் பாய்ந்து மண் வளத்தை பாதிக்கிறது. காட்டில் மரங்கள் அழிந்து வருவதால், அடர்த்தி குறைந்து வருகிறது. மேலும், இப்பகுதியில் பயிரிட்டுள்ள நிலங்களிலும், கழிவு நீர் கலந்து, விவசாயத்தை பாதிக்கிறது.
எனவே, இப்பகுதியில் இயங்கும் தனியார் தொழிற்சாலையில் இருந்து, வனத்துறைக்கு சொந்தமான காட்டில், எம்-சாண்ட் கழிவு நீர் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறினர்.
மேலும் படிக்க
குறுவைத் தொகுப்புத் திட்டம்: புறக்கணிக்கப்படுவதாக நாகை மாவட்ட விவசாயிகள் புலம்பல்!
Share your comments