மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஜல்தபாரா தேசிய பூங்காவில் நேற்று சுற்றுலா பயணிகள் வந்த சஃபாரி ஜீப் வாகனத்தை இரண்டு காண்டாமிருகங்கள் மோதியதில் 7 சுற்றுலாப் பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். அது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஐ.எப்.எஸ் அதிகாரியான ஆகாஷ் தீப் பத்வாவான் நேற்று ட்விட்டரில் பதிவிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் அமைந்துள்ளது ஜல்தபாரா தேசிய பூங்கா. இங்கு வனவிலங்குகளை காண, புகைப்படம் எடுக்க சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது உண்டு. சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஜீப் சஃபாரி வசதியும் உள்ளது. இந்நிலையில் தான், நேற்று சஃபாரி ஜீப்பில் ஒரு சுற்றுலாப் பயணிகளின் குழு சென்றது. அப்போது புதர்களுக்கு இடையே இரண்டு காண்டாமிருகங்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தது. ஆர்வ மிகுதியில் சுற்றுலா பயணிகள் தங்களது கேமரா மூலம் மாற்றி மாற்றி புகைப்படம், வீடியோக்களை எடுக்கும் சூழ்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் காண்டாமிருகங்கள் ஜீப்பினை நோக்கி வேகமாக நகரத்தொடங்கியது.
இதனால் நிலைக்குலைந்த ஜீப் டிரைவர் வாகனத்தை பின்னோக்கி வேகமாக இயக்கினார். இருப்பினும், காண்டாமிருகங்கள் நேரடியாக ஜீப்பின் மீது மோதியது. ஜீப்பானது பாதையின் பக்கவாட்டில் இறங்க தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் உட்பட ஜீப்பில் பயணித்த 7 சுற்றுலாப்பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் உடனடியாக உள்ளூர் மதரிஹாட் சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் அவர்களை அலிபுர்தார் மாவட்ட மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜல்தபாரா தேசிய பூங்காவில், சுற்றுலா வாகனங்களை நோக்கி காண்டாமிருகங்கள் செல்வது, தாக்குவது என கடந்த 15 ஆண்டுகளில் இதுவரை எந்த சம்பவமும் பதிவாகியதில்லை. இந்த விபத்து எதிர்ப்பாராத ஒன்று என குறிப்பிட்டார்.
காயம் அடைந்த ஜீப்பை ஓட்டி வந்த டிரைவர் கமல் காசி கூறுகையில், தான் நீண்ட நாட்களாக இந்த தொழிலில் உள்ளேன். இதுபோன்ற சூழ்நிலையை நான் ஒரு போது சந்தித்ததில்லை. ஜீப் முழுமையாக கவிழ்ந்த போது இரண்டாவது முறையாக எங்களை காண்டாமிருகங்கள் தாக்காமல் போனது எங்களது அதிர்ஷ்டம். நாங்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தோம் என குறிப்பிட்டுள்ளார்.
வீடியோவினை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ஐ.எப்.எஸ் அதிகாரி தனது ட்வீட்டில், வன உயிரின பூங்காவிலுள்ள ஜீப் சஃபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மற்றும் முறையான நெறிகாட்டு வழிமுறைகளை வகுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். உயிர்சேதம் எதுவும் ஏற்படாத நிலையில், இந்த விபத்து காணொளி சமூக வலைத்தளங்களில் வைராலாகி வருகிறது. மேலும் வன உயிரின பாதுகாப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாகவும் மாறியுள்ளது.
மேலும் படிக்க:
86 தலைப்புகளில் தமிழக அரசுக்கு 307 யோசனைகள்- பாமகவின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை
ஒரு லட்சம் பரிசு- பசுமை சாம்பியன் விருது பெற யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Share your comments